சினிமா

இந்தமுறை சென்னை இல்லை; இசை வெளியீட்டு விழாவிற்கு வேறு இடத்தை குறித்த மாஸ்டர் குழு?

இந்தமுறை சென்னை இல்லை; இசை வெளியீட்டு விழாவிற்கு வேறு இடத்தை குறித்த மாஸ்டர் குழு?

webteam


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டிக் கதை’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு போஸ்ட் புரோடக்ஷன் வேலைகளை இயக்குநர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இதற்கிடையே அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சர்கார், பிகில் ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவுக்கு உரிய அனுமதி பெறுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறாது என்றும், கோவையில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவலை நடிகர் சாந்தனு, கல்லூரி விழா ஒன்றில் தெரிவித்ததாகவும் அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. வருமான வரித்துறை சோதனை, படப்பிடிப்புத் தளத்தில் அரசியல்கட்சியின் ஆர்ப்பாட்டம் என பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தும் இது குறித்து விஜய் ஏதும் வாய்திறக்கவில்லை. இதுகுறித்து இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இசை வெளியீட்டு விழா எங்கு, எப்போது நடைபெற போகிறது என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.