‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் பைக் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் இடம்பெறவுள்ள ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் அண்மையில் வெளியானது.
அத்துடன் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றும் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அணிந்திருந்த கால்பந்து உடையில் ‘நம்பர் 5’ என பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ‘பிகில்’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் பைக் ஓட்டும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அதில் விலை உயர்ந்த பைக் ஒன்றை விஜய் ஓட்டிச் செல்கிறார்.
அந்த பைக்கின் நம்பர் பிளேட்டில் விஜய்யின் புகைப்படத்துடன் ‘மைக்கேல் 05’ என பதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் கருப்பு நிற உடை, கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும் விஜய், ரசிகர்களுக்கு பாலத்தின் மீது இருந்து கை அசைக்கிறார். அந்தக் காட்சிகளும், விஜய் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது.