விஜய்க்கு வளர்ப்புத் தந்தையாக மெர்சல் படத்தில் வடிவேலு நடித்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் மேஜிக் மேன், கிராமத்து இளைஞர், மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக ஓய்வெடுத்து வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மெர்சல் படத்தில் நடித்துள்ளார். பொதுவாக விஜய், வடிவேலு இணைந்து நடித்த படங்களில் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக அமைந்து விடும்.
பகவதி, வசீகரா, போக்கிரி, காவலன் ஆகிய படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் தூக்கலாக இருந்துள்ளன. இந்நிலையில், மெர்சல் படத்தில் கிராமத்து இளைஞராக வரும் விஜயின் வளர்ப்புத் தந்தையாக வடிவேலு நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தில் நகைச்சுவையோடு, செண்டிமெண்ட் கலந்த பாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வடிவேலு வெளிப்படுத்தி இருப்பதாக ஏற்கெனவே அட்லி தெரிவித்து இருந்தார்.
கிராமத்து இளைஞராக வரும் விஜய்க்கு கோவை சரளா தாயாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு புதிய பரிணாமத்தில் இருக்கும் என்கிறது படக்குழு.