‘தளபதி64’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கான பூஜை கடந்த 3-ஆம் தேதி போட்டப்பட்டது. அதில் விஜய்சேதுபதி, அனிருத் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் படத்திற்கான தலைப்பு என்ன என்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆகவே இது பற்றிய தகவல்கள் முழுவதும் ‘தளபதி64’ என்று குறிப்பிட்டே வெளியிடப்பட்டு வருகின்றன.
அதனை அடுத்து இப்படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழு தொடர்ச்சியாக அறிவித்தது.
மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தில் பேராசிரியராக விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று முடிந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஏற்கெனவே ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். மேலும் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறி இருந்தார். இந்த முதற்கட்ட படிப்பிடிப்பில் விஜய் பங்கேற்ற பாடல் காட்சியை படக்குழு படமாக்கி உள்ளது. அதில் விஜயுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘தளபதி64’படப்பிடிப்பு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்க இருக்கிறார். படத்தில் விஜய் சார்ந்த மிக முக்கியமான காட்சிகளை முதலில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப் படப்பிடிப்பில் விஜய்சேதிபதியும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.