விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் திரையரங்க உரிமை ரூ.200 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
விஜய் ரசிகர்கள் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்த்து காத்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் முதன்முறையாக விஜயுடன் இணைந்து விஜய்சேதுபதி நடித்து வருகிறார். மார்க்கெட் வேல்யூ உள்ள இரண்டு நடிகர்கள் இணையும் படம் என்பதால் அதற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அதற்குள் அதற்கான விற்பனை உரிமை விற்று முடிந்துவிட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒரு திரைப்படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போது அதற்கான உரிமையை விற்கமாட்டார்கள். அதற்கு எந்தத் தயாரிப்பாளரும் முன்வர மாட்டார்கள். ஆனால் ‘மாஸ்டர்’ படத்தின் உரிமைகள் படம் வெளியாவதற்கு முன்பே முழுமையாக விற்பனையாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய 200 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சாதனையை ரஜினி படங்கள் செய்துள்ளன. இப்போது விஜய் அதனைத் தாண்டி உள்ளார்.
திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் படத்தின் உள்ளடக்கம் குறித்து பெரும் நம்பிக்கையை வைத்துள்ளதால் இந்தப் படத்தின் விற்பனை இந்தளவுக்கு எகிறியுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘கைதி’க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் ‘மாஸ்டர்’ படத்தின் மதிப்பு கூடியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தப் படத்தின் உரிமையை ஒரு தனிப்பட்ட பெரிய நிறுவனத்திற்கு பெரிய தொகைக்கு விற்பதைவிட பலருக்கும் நியாயமான விலையில் பகிர்ந்தளிக்கும்படி விஜய் அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எக்ஸ்பி பிலிம் நிறுவனம் மூலம் இந்தப் படத்தினை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இப்படத்தில் மாலவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ்,சாந்தனு பாக்யராஜ் மற்றும் கவுரி கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.