பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று நேற்று நடைபெற்ற ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறினார். அத்துடன், “சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க” என்றும் விஜய் தெரிவித்தார்.
சுபஸ்ரீ குறித்து விஜய் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர் " என் தாய்மொழி மீது கை வைக்காத வரை அவர்கள் கருத்துகள் ஏற்கப்படும் ஆனால் தாய்மொழி மீது கைவைத்தால் மன்னிக்கப்படாது. யாரை கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர் என்று நடிகர் விஜய் பேசியது வரவேற்கத்தக்கது. நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். தம்பிக்கு விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றார் அவர்.