சினிமா

“அண்ணா, அந்த வரி என்னுடையது” - வெளிச்சத்திற்கு வந்த விஜய்யின் ‘ஜம்’ வசனம்

webteam

விஜய் பேசிய வசனம் யார் எழுதியது என்பதற்கான விடை இப்போது சமூக வலைத்தளத்தின் மூலம் கிடைத்துள்ளது. 

‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய், பல அரசியல் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் கூறி இருந்தார். குறிப்பாக ‘நிஜத்தில் முதலமைச்சரானால் நான் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்’என்று  குறிப்பிட்டிருந்தார். 

அந்தக் கருத்தை அதிமுக வட்டத்தினர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர். அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதனால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்’ என்றும் கூறியிருந்தார். 

இதே விழாவில் விஜய் இன்னொரு கருத்தையும் கூறினார். அதாவது தனது வாழ்க்கையில் அந்தக் கருத்தை அவர் பின்பற்றி வருவதாகவும் கூறினார். ரைமிங் ஆகவும் டைமிங் ஆகவும் இருந்த அந்த வசனம் அவரது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. விஜய் தனது பேச்சில், “கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும், உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை சும்மா ஜம்முன்னு இருக்கும்’என்றார். ஆனால் இந்த வசனம் யாருடையது என்று தெரியவில்லை எனவும் அவர் கூறினார். 

பலரும் அந்த வசனத்தை இப்போது ‘மியூசிக்கலி’ செயலியில் எடுத்துபோட்டு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த வசனம் யாருடையது எனத் தெரிய வந்துள்ளது. ட்விட்டரில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் கயல்விழி என்பவர் (@kayal_twitz) இது தன்னுடைய ட்வீட்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது டயலாக்கை விஜய் நிஜ வாழ்க்கையில் கடைபிடித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் போட்டுள்ள நிலைத்தகவலில், “என்னோட லைன்ஸ்தான் அண்ணா அந்த டிவிட் ...என்னோட லைன்ஸ பாலோவ் பண்றீங்கனு நினைக்கும் போது ரொம்ப கர்வமா இருக்கு ...வாழ்த்துகள் அண்ணா @actorvijay” என்று அவர் உற்சாகம் பொங்க எழுதியுள்ளார்.