விஜய்யும் நடிகர் ராதாரவியும் சந்தித்து கொண்ட புகைப்படம் டவிட்டரில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. திரை உலகமே வேலை நிறுத்தத்தில் இருக்கும் போது விஜய்யின் இந்தப் படம் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான விளக்கத்தை இதுவரை படக்குழு தெரிவிக்கவே இல்லை. இந்நிலையில் விஜய் படப்பிடிப்பின் போது நடிகர் ராதாரவி எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது‘தளபதி62’ செட்டில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் எனத் தெரிகிறது. அப்படி என்றால் இந்தப் படத்தில் நடிகர் ராதாரவியும் சேர்ந்து நடிக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூடவே திரைத்துறை வேலை நிறுத்தத்தை மீறி தொடர்ந்து விஜய்யின் படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று கூட நடிகர் விஷால், கோரிக்கைகள் இதுவரை நிறைவேறாததால் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் தொடரும் என்றும், திரைத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்தவே வேலை நிறுத்தத்தை தொடங்கினோம் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பையும் விஜய் படப்பிடிப்பையும் தொடர்பு படுத்தி ‘ஸ்டிரைக் இருக்கா? இல்லையா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.