சினிமா

மிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

மிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

rajakannan

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

முதலில் ஏப்ரல் 11-ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என்றே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. சுமார் 7 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது தான் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் மாஸ்டர் ரிலீஸை பொங்கலுக்கு ஒத்திவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், மாஸ்டர் படம் குறித்த அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் விஜய் ரசிகர்கள் அப்டேட் எங்கே என சமூக வலைதளங்களிலும் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்தனர். அதுவும், லோகஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் அப்டேட்களே அடுத்தது வெளியாகின. ஆனால், 'மாஸ்டர்' அப்டேட் வரவேயில்லை என ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 'மாஸ்டர்' படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றினை படத்தயாரிப்பு நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 'மாஸ்டர்' படத்தின் டீசர் நவம்பர் 14ம் தேதி, அதாவது தீபாவளி அன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்பதுதான் அந்த அப்டேட். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இந்தத் தகவலுடன் விஜய் - விஜய்சேதுபதி இணைந்துள்ள போஸ்டர் ஒன்றினையும் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் சேதுபதியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் விஜய், அவரின் (விஜய் சேதுபதி) தோளில் தனது கையை வைக்கிறார். விஜய் சேதுபதியும் விஜய் தொடவுள்ளதை திரும்பி பார்க்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.