சினிமா

’டியர் காம்ரேட்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்தது ஏன்?

webteam

’டியர் காம்ரேட்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன் என்பதை அந்தப் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’டியர் காம்ரேட்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பெற்றுள்ளார்.

இதில் விஜய் தேவரகொண்டாவையே நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இஷான் கட்டார், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தி ரீமேக்கில் நடிக்காதது ஏன் என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது, ‘’நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம். அதோடு ஒரே கதை இரண்டு முறை சொல்லப்படும்போது, அதில் நடிக்க விருப்பம் இல்லை.

இந்தப் படத்துக்காக அதிக எனர்ஜியை கொடுத்து, நடித்திருக்கிறேன். அதையே திரும்ப செய்வதில் விருப்பம் இல்லை. ஏனென்றால் காட்சிகளில் இருந்து எல்லாமே எனக்கு தெரிந்த விஷயம் என்பதால் அதில் மீண்டும் ஆறு மாதம் செலவழிக்க விரும்பவில்லை’’ என்றார் தேவரகொண்டா.