அர்ஜூன் ரெட்டி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர் விஜய் தேவரகொண்டா. அந்தப்படம் மட்டுமின்றி அடுத்து வெளியான கீதா கோவிந்தம், டாக்ஸி வாலா போன்ற திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றன. இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் நடிகராக உருவெடுத்துள்ள விஜய் தேவரகொண்டாவை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கவுரப்படுத்தியுள்ளது. 30 வயதுக்குட்பட்ட இந்திய சாதனை இளைஞர்கள் பட்டியலில் விஜய் தேவரகொண்டா இடம் பெற்றுள்ளார். அதாவது '30 அண்டர் 30' என்ற பிரிவில் இடம்பிடித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''என்னுடைய 25வது வயதில் ஆந்திர வங்கி கணக்கில் ரூ.500 இல்லை என்றால் கணக்கு திவாலாகிவிடும். 30 வயதுக்குள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டுமென்று என் அப்பா சொல்வார். பெற்றோர் ஆரோக்யத்தோடு இருக்கும் போதும், நீ இளைமையாக இருக்கும் போதுமே வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென்று கூறுவார். 4 வருடத்துக்கு பிறகு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் நான் 30 வயதுக்குட்பட்ட இந்திய சாதனை இளைஞர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தேவரகொண்டாவின் பதிவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள பலரும் ''நீங்கள் தகுதியானவர் தான்'' என்றும், ''உண்மையான உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு'' என்றும் குறிப்பிட்டுள்ளனர். ''உங்களை முன்மாதிரியாக கொண்டு நானும் உழைத்து வாழ்வில் வெற்றி பெறுவேன்'' என பலரும் பதிவிட ''நிச்சயம் முடியும்'' என்றும், ''நான் எதிர்பார்ப்பேன்'' என்றும் அவர்களுக்கு ஊக்கமாக பதிலிட்டுள்ளார் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டா தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தருண் பாஸ்கர் நடிக்கும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.