Shakthi Thirumagan Vijay Antony
சினிமா

வித்தியாசமான அரசியல் ஆட்டம்... சக்தித் திருமகன் எப்படி? | Shakthi Thirumagan Review

விஜய் ஆண்டனியிடம் ஒரு வேலை வந்தால், அதை நிறைவேற்ற அவர் எப்படி ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்துகிறார் என்பதாக முதல் பாதியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் விறுவிறுப்பாக செல்கிறது.

Johnson

அதிகாரிகளை பகடையாய் வைத்து ஒரு புத்திசாலி அரசியல் ஆட்டம் ஆடுவதே கதை!

கிட்டு (விஜய் ஆண்டனி) அரசியல் தரகராக பல விஷயங்களை செய்பவர். அரசியலோ, ஆன்மிக குருவோ எல்லோரின் தொடர்பும் உண்டு. சென்ட்ரல், ஸ்டேட்டு துவங்கி போலீஸ் ஏட்டு வரை பலருக்கும் வேண்டிய உதவிகளை, விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பவர். அவருக்கு தேவையான முடிவுகளை மற்றவர்கள் எடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும் தந்திரம் மூலம் வேண்டிய எல்லாவற்றையும் சாதித்துக் கொள்கிறார். அந்த வேலைக்கான கமிஷன் சொற்பமாக இருக்க, பெரிய பணம் ஒன்றுக்காக ஒரு வேலையை செய்கிறார். அதன் சங்கிலி தொடர் போல, நடக்கும் விஷயங்கள் பலரது பகைக்கு கிட்டு ஆளாக நேர்கிறது. உண்மையில் கிட்டு யார்? ஏன் இவற்றை செய்கிறார்? என்பதெல்லாம் படத்தின் மீதிக் கதை.

Shakthi Thirumagan

இந்தப் படத்தில் மிக சுவாரஸ்யமானது, பலமானதும் படத்தின் முதல் பாதி. விஜய் ஆண்டனியிடம் ஒரு வேலை வந்தால், அதை நிறைவேற்ற அவர் எப்படி ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்துகிறார் என்பதாக முதல் பாதியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் விறுவிறுப்பாக செல்கிறது. சமூகம் சார்ந்து, அதிகார மையங்கள் பற்றி இயக்குநர் அருண் பிரபு முன் வைக்கும் கருத்துக்களும், கேள்விகளும் கவனிக்க வைக்கின்றன.

விஜய் ஆண்டனி வழக்கம் போல தனது மீட்டர் மிஸ் ஆகாமல் நடிப்பை கொடுத்திருக்கிறார். மேலிடத்திடம் பணிந்து பேசுவது, தன் கை ஓங்கி இருக்கும் இடங்களில் எகிறி அடிப்பது, ஆவேசமாக வசனங்கள் பேசுவது என இந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார். விஜய் ஆண்டனியின் வலதுகரமாக மாறன் பாத்திரத்தில் செல்முருகன். விஜய் ஆண்டனியின் திட்டங்கள் புரியாமல் திணறுவது, அதிகாரிகளுக்கு பயந்து ஓடுவது என கொடுக்கப்பட்ட வேலையை முடித்திருக்கிறார். காதல் ஓவியம் கண்ணன், இதில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அப்யங்கராக திரும்பியிருக்கிறார். விஜய் ஆண்டனியை குறைவாக எடை போட்டுவிட்டோம் என உணரும் இடம், இறுதியில் அவரிடம் பேரம் பேசுவது என நல்ல நடிப்பை கொடுக்கிறார். நடிகைகள் திருப்தி, ரியா ஆகியோருக்கு பெரிய ரோல் இல்லை. கெஸ்ட் ரோலில் வாகை சந்திரசேகர் கவனிக்க வைக்கிறார். 

Shakthi Thirumagan

ஷெல்லியின் ஒளிப்பதிவு படத்தின் மர்மமான உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. ரேமண்ட் - தின்சா படத்தொகுப்பு ஏற்கெனவே பரபரவென நகரும் கதைக்கு எக்ஸ்டரா பூஸ்ட் கொடுத்திருக்கிறது. அதே சமயம் இது ஹெவியாக கே.ஜி.எஃப் படத்தின் தாக்கம் தெரிகிறது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பல இடங்களில் மாஸ் ஏற்றுகிறது. தேவையான இடங்களில் படபடப்பையும் கூட்டுகிறது.

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இடைவேளைக்கு பிறகான படத்தைதான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் ஒரு வித்தியாசமான த்ரில்லரை பார்க்கப் போகிறோம் என நிமிர்ந்து உட்கார்ந்தால், இரண்டாம் பாதி மிகவும் வழக்கமான விதத்துக்கு மாறுகிறது. முதல் பாதியில் சம்பவங்கள் மூலமாக நகர்ந்த கதை, இரண்டாம் பாதியில் வெறுமனே பெரிய பெரிய வசனங்கள் மூலமாக நகர்கிறது. பெரிய ஈவென்ட் எதுவும் இல்லை என்பது படத்தின் மீதான ஆர்வத்தை குறைக்கிறது. விஜய் ஆண்டனி சார்ந்த ஃபிளாஷ்பேக்கும் படு பலவீனமாகவே இருந்தது. மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது சரி, ஆனால் அதை எதன் மூலமாக சொல்லி இருக்கிறார் என்பதே பிரச்சனை. கிட்டத்தட்ட இரண்டாம் பாதி ஒரு நீண்ட பொலிட்டிகல் சைன்ஸ் வகுப்பறையில் உட்கார்ந்த உணர்வுதான் தருகிறது. அதிலும் பழிவாங்க வரும் ஹீரோ, கடத்தி வைத்து மிரட்டும் திட்டம் என ரொம்ப வழக்கமான டெம்ப்ளேட் படமாக மாறிவிடுகிறது. 

ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஒரு விறுவிறுப்பான முதல் பாதி, பலவீனமான இரண்டாம் பாதி என ஆவரேஜ் படமாக முடிகிறது. இடைவேளைக்கு முன்பு இருந்த பரபரப்பும், தெளிவும், படம் முழுக்க இருந்திருந்தால் ஜொலித்திருப்பான் இந்த `சக்தித் திருமகன்'.