நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவுள்ள "பிச்சைக்காரன் 2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில் "பிச்சைக்காரன் 2" படத்துக்கான கதை, திரைக்கதையை இப்போது விஜய் ஆண்டனியே எழுதியுள்ளார். இதனை கடந்தாண்டு 'பாரம்' படத்துக்காக தேசிய விருது வென்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து இன்று விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு 'பிச்சைக்காரன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளது. தேனி ஈஸ்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.