தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் இந்த வாரம் `சக்தித் திருமகன்' படம் வெளியானது. இதற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில், தன் சினிமா பயணம் பற்றியும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்தப் பேட்டியில் "வாழ்க்கையில் எந்த பிரச்சனையில் இருந்தும் மீண்டு வருவது என்பதற்கு என்ன தேவை என நினைக்கிறீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட,
மறைந்த தன் மகளின் இழப்பில் இருந்து மீண்டு வந்ததை குறிக்கும் படி பதில் அளித்தார் விஜய் ஆண்டனி. இது பற்றி பேசியவர் "என்னை ஆட்டிப்பார்க்க கூடிய விஷயங்கள் என்பது தனிப்பட்ட விஷயங்கள்தானே தவிர, வியாபார விஷயங்கள் இல்லை. எவ்வளவு ஏற்ற, இறங்கங்கள் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நினைப்பேன். அப்படியான விஷயங்களுக்கு யாரும் கலங்க வேண்டாம். லாபமோ நஷ்டமோ அதை தனியாக எதிர் கொள்ளக் கூடிய தன்னம்பிக்கையை வைத்துக் கொள்ளுங்கள். அது பெரிய விஷயம் கிடையாது.
எதை வேண்டுமானால் சமாளிக்க முடியும். சில தனிப்பட்ட விஷயங்கள், குறிப்பாக சிலர் இல்லாமல் போகும் சூழல் ஏற்படும் போது, அவர்கள் இல்லை என நினைக்கக் கூடாது. யாரும் அப்படி இல்லாமல் போவதில்லை. இருக்கிறார்கள், உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அவர்களையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு வாழ முடியும் என்ற சூழல் வரும் பொது, இழப்பு என்பதே உங்களுக்கு இல்லாமல் போய்விடும். எனவே இழப்பு என்பது எனக்கு இல்லை. நான் இப்போதும் மகிழ்வோடு தான் இருக்கிறேன். தினமும் என் மகளோடு பேசுகிறேன், பழகுகிறேன், காமெடிகள் செய்கிறேன். அவள் பற்றி பேசும் போது நீங்கள் யாரும் அனுதாபப்பட வேண்டாம். இழப்பு என்பது கிடையாது." எனக் கூறினார்.