2020 ஆம் ஆண்டில், இந்திய அளவில் ட்விட்டர் தளத்தில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது என்று ட்விட்டர் இந்தியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் தகவலை வெளியிட்டு இருக்கிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
விஜய்யின் 64 வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். கடந்த தீபாவளி அன்று, 'மாஸ்டர்' படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் பெற்றுள்ளது. வரும் பொங்கலுக்கு படத்தை தியேட்டர்களில் வெளியிட படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், ட்விட்டர் இந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களில் விஜய்யின் ’மாஸ்டர்’ படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அஜித்தின் 'வலிமை' மூன்றாவது இடமும், 'சூரரைப் போற்று' ஐந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
அதேபோல, அதிகம் ட்விட்டர் பதிவுகள் செய்யப்பட்ட நடிகர்கள் வரிசையில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.