சினிமா

நடு ராத்திரியில் ‘தனி ஒருவனாக’ மாறிய விஜய்

நடு ராத்திரியில் ‘தனி ஒருவனாக’ மாறிய விஜய்

webteam

தமிழ்நாட்டில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ரஜினி, கமலுக்குப் பிறகு அவர்தான் இளம் தலைமுறையை ஈர்க்கும் நடிகர். இவர் அளவுக்கு அஜித்திற்கும் ரசிகர்கள் உண்டு. அஜித் வெளி உலகத்தோடு எந்தத் தொடர்புமே இல்லாமல் வாழ்கிறார். விஜய் வெளி உலகத்தோடு நேரடி உறவு இல்லை. ஆனால் சகல விசயத்தையும் உற்றுக் கவனிப்பதில் விஜய் தனித்துவமானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் தமிழகப் பிரச்னைகள் குறித்து அதிகம் அக்கறை கொள்வார். ஒரு முறை தனியர் நிறுவன விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு விருது பெற வழக்கம் போல மேடையேறினார் விஜய். அவரது ரசிகர்கள் என்ன  பேசப்போகிறார் என காத்திருந்தனர். அவர் என்ன சொன்னார் தெரியுமா? அடுத்த படம் ரிலீஸ் பற்றி பேசவில்லை. தமிழகமே ஸ்தம்பித்து போய் இருந்த ஒரு பிரச்னை பற்றி பேசினார். 

‘வல்லரசாவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். விவசாயிகளை காக்கும் நல்லரசாக நாம் மாற வேண்டும்’என்றார். அன்று மேடையில் நின்றது வழக்கமான விஜய் இல்லை. அவரது வாழ்நாளில் அந்தப் பேச்சு வைரல் ரகம். விஜய்க்கு அது புதிய முகம். மேடையில் அவர் பேசியதால் அந்தக் குரல் மூலை முடுக்கெல்லாம் போய் முட்டியது. விவசாயிகளின் நிலையை பற்றி அரசு செவிக்குபோய் அது எட்டியது. அங்குதான் ஒரு விஜய் தேவைப்படுகிறார். 100 நாளாக டெல்லியில் காத்துக்கிடந்த விவசாயிகளின் சார்பாக அவர் தனது விருது மேடையை பகிர்ந்து கொண்டது ஒப்புக்கு அல்ல; உப்பிட்ட விவசாயிக்கு நான் துணையாக நிற்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக. அந்தக் குணம், அந்த மனம்தான் விஜய். நடிப்பதை மீறி தனக்கு ஒரு மனிதனாக சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை ஒவ்வொரு மட்டத்திலும் உணர்த்தி வருகிறார் அவர்.

இப்போது அவரது வாழ்க்கையில் இன்னொரு மொமெண்ட். இன்னொரு இன்னிங்ஸ். நட்டநடு ராத்திரியில் அவர் முன்பின் அறியாத வீட்டுக்கதைவை போய் தட்டி நின்றிருக்கிறார். ஏன்? அடுத்த படத்திற்கு ஆதரவு கேட்டா? இல்லை. தொப்புள்கொடி உறவான தமிழக மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியில் தன்னையும் இணைத்துக் கொள்ள. இந்த இதயம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை விஜய் அல்ல; யார் செய்தாலும் மக்கள் பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டு இன்று விஜய் பக்கம் திரும்பி இருக்கிறது. முகத்தை மறைத்துக் கொண்டு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றாக தேடிப்போய் பார்த்திருக்கிறார். அந்த வீட்டிற்குள் விஜய் நின்றிருந்த தோரணை ஒரு நடிகருக்கானதல்ல. 

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மறக்க முடியாது. தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் எழுச்சியை உண்டாகிய போராட்டம், ஜல்லிக்கட்டு. அது உச்சகட்டத்தில் நடைபெற்றபோது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு வீடியோவை பதிவு செய்தார் விஜய். மேலும் மெரினாவில் தொடர்ந்த போராட்ட களத்திற்கு போய் கால் வைத்தார்  விஜய். அங்கேயே அமர்ந்து ஆதரவை தெரிவித்தார். தன்னை யாரும்  அடையாளம் காணாமல் இருக்க முகத்தில் முகமூடி கட்டியப்படி விஜய் அமர்ந்திருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களை வேகமாக பரவியது. பெரும் நடிகர்கள் யாரும் களத்திற்கு வந்து ஆதரவு தெரிவிக்காத சமயத்தில் விஜய் அங்கு சென்றதை பலரும் வரவேற்றனர். 

அடுத்து நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரிழந்த அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டங்களை நடத்தினர்.  அனிதாவின் மரணத்துக்கு நீதிக் கேட்டும்  நீட் தேர்வுக்கு எதிராகப் போராடினர். எதற்கும் விஜய்யிடம் இருந்து நேரடியான பதில் இல்லை. ஒரு வாரம் கழித்து அரியலூர் மாவட்டம் குழுமூரிலுள்ள அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். அனிதாவின் தந்தை சண்முகத்துடன் விஜய் தரையில் அமர்ந்து பேசினார். அதற்கான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. 

காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கம் நடத்திய மெளனப் போராட்டத்திற்கும் முதல் ஆளாய் வந்து நின்றார் விஜய். முதல் ஆளாக வந்தவர் இறுதி நபராக கூட்டத்தைவிட்டு வெளியேறினார் . பொதுவாக சினிமாக்காரர்கள் போராட்டங்கள் என்றால் பெரிய நடிகர்கள் கடைசி தருணத்தில் வந்து ஆதரவு அளித்துவிட்டு சென்று விடுவார்கள். அப்படி இல்லை என்றால் முதல் ஆளாக வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சென்று விடுவார்கள். விஜய் இதற்கு நேர்மாறாக இருந்தார். 

இப்போது தூத்துக்குடி துயரத்திலும் உணர்வுப்பூர்வமாக நடந்து கொண்டுள்ளார் விஜய். மே மாதம் 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிர் காற்றில் கரைந்தது. அவர்களின் ரத்தம் தரையை நனைத்தது. காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  கமல், ரஜினி ஏற்கனவே சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். பகலில் போனால் ரசிகர்கள் அதிகம் கூடுவர் என்பதால் நள்ளிரவு நேரத்தில் அமைதியாக சென்றுள்ளார் விஜய். தனது ரசிகர் ஒருவரது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார். 

விஜய்யின் இந்தச் சந்திப்பு குறித்து “மகளை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்தில் இரண்டு பைக் வந்தது. யாரென்று தெரியவில்லையே என பார்த்தோம். உடனே கையெடுத்து கும்பிட்டப்படி விஜய் வீட்டுக்குள் வந்தார். எங்களுடன் அமர்ந்து எங்களுடைய அனுதாபத்திலும், சோகத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ‘நேரம் கடந்து வந்துடேன்.  அதற்காக தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்’ என்றார். மேலும் இரவு நேரத்தில் வந்ததற்காக எங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். எங்கள் வேதனையில் ஒரு மகனைப் போல பங்கெடுத்துக் கொண்டார்” என ஸ்நோலின் அம்மா வனிதா தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்புக்கான புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. விஜய்யின் மனிதாபிமானம் குறித்து அவரது ரசிகர்கள் புகழ் மாலை போட்டு வருகின்றனர். அதற்குள் விஜய்யின் விசிட் குறித்து அரசியல் விமர்சனமும் எழத் தொடங்கியுள்ளது. வழக்கம் போல அதனை விஜய் ஒன்றும் பொருட்படுத்தப் போவதில்லை. அதுதான் அவரது ஸ்டைல்.