சினிமா

திருப்பதியில் செருப்புடன் நடந்ததாக சர்ச்சை.. மன்னிப்பு கோரிய விக்னேஷ் சிவன்

kaleelrahman

திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட வீதியில் கால்களில் செருப்புகளுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றது குறித்து செய்திகள் வெளியான நிலையில், விக்னேஷ் சிவன் மன்னிப்புக்கோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையில் நடந்தது. திருப்பதியில் திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் சென்னையில் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு 10-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்தோடு வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர், நண்பகல் 12 மணிக்கு கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு பின்னர், ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

அதன் பின், மாட வீதிகளில் போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது அவர்களது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கால்களில் செருப்பு அணிந்து மாட வீதியில் நடந்து சென்றனர்.இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தங்களுடைய திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களால் சென்னையில் நடந்ததாகவும், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்ததாகவும், இந்த நாள் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு வெளியே போட்டோ எடுத்ததாகவும், திருப்பதியிலேயே திருமணம் நடந்தது போல் உணர்ந்ததாக தெரிவித்தார்.

அத்துடன், கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோயில் வளாகத்தை விட்டு வெளியேறி மீண்டும் வந்த போது, போட்டோ எடுக்கும் அவசரத்தில் கோயிலுக்கு வெளியே திரும்பி செல்லும் போத செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை எனவும், தாங்கள் இருவரும் தொடர்ந்து கோயில்களுக்கு செல்லும் தம்பதிகள் எனவும், கடவுள் மீது அபரிமித நம்பிக்கை கொண்டவர்கள் எனவும், கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருமலைக்கு சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்ததாகவும், செருப்பு அணிந்து சென்றது குறித்து தங்களால் புண்படுத்தப்பட்டவர்களிடம் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை எனவும், திருமண நாளுக்காக அனைவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் அந்த கடிதத்தில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.