மலையாள நடிகர் மம்முகோயா
மலையாள நடிகர் மம்முகோயா கோப்புப் படம்
சினிமா

“ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”- மலையாள நடிகர் மம்முகோயா மறைவுக்கு கேரள முதல்வர் இரங்கல்

சங்கீதா

கடந்த 1946-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா மாநிலம் கோழிக்கோடு கல்லாயி என்ற ஊரில் பிறந்த மம்முகோயா, நாடக நடிகராக தனது வாழ்க்கையை துவங்கினார். அதன்பிறகு கடந்த 1979-ம் ஆண்டு ‘அன்யாருடே பூமி’ என்றப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான அவர், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து முத்திரை பதித்தார். மாநில அரசு விருதுகளை இரண்டுமுறை வென்றுள்ள மம்முகோயா, சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மம்மூட்டி, மம்முகோயா

தமிழில் ‘அரங்கேற்ற வேளை’, ‘கோப்ரா’ ஆகியப் படங்களில் மம்முகோயா நடித்துள்ளார். மேலும், ‘Flammen im Paradies’ என்ற பிரெஞ்சு படத்தில் ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார். குறிப்பிடத்தக்க சில தொலைக்காட்சி தொடர்களிலும், சில குறும்படங்களிலும் நடித்துள்ள மம்முகோயா, மலப்புரம் மாவட்டம் களிக்காவு என்ற இடத்தில் கால்பந்து போட்டியை துவங்கி வைப்பதற்காக கடந்த திங்கள்கிழமை (ஏப்.24) இரவு சென்றுள்ளார்.

அப்போது நிகழ்ச்சி துவங்கும் முன்பே, உடல்நிலை அசௌரிகத்தால் மைதானத்திலேயே மயங்கி சரிந்து விழுந்த மம்முகோயா, உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து கோழிக்கோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்.26) மாரடைப்பு காரணமாக மருத்துமனையில் மம்முகோயா உயிரிழந்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

பழம்பெரும் நடிகர் மம்முகோயாவின் மரணம், கேரள மாநிலத்துக்கும் மலையாள திரையுலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீஷன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மம்முகோயா உயிரிழந்ததையடுத்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.