சினிமா

"கான் நடிகர்கள் மூவரும் ஏன் மவுனம் காக்கின்றனர்?" - நசீருதீன் ஷா 'பளீச்'

PT WEB

"பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான கான் நடிகர்கள் மூவரும் ஏன் பொது விஷயங்களில் மவுனம் காக்கின்றனர்" என்று மூத்த நடிகர் நசீருதீன் ஷா பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் நசீருதீன் ஷா சமீபத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேசியிருந்தார். அதில் "ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருப்பது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முஸ்லிம்களில் சிலர் அந்தக் காட்டுமிராண்டி கும்பலை கொண்டாடுவது ஆபத்தானது. நான் ஓர் இந்திய முஸ்லிம், பல வருடங்களுக்கு முன்பு மிர்சா காலிப் கூறியதுபோல், என் கடவுளுடனான எனது உறவு முறைசாராதது. எனக்கு அரசியல் கலந்த மதம் தேவையில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்து சர்ச்சைக்குள்ளாக்கியது. இந்தநிலையில், ஒரு சில பெரிய இந்திய திரைப்பட கலைஞர்கள் சமீபகாலமாக எடுத்து வரும் பிரசார பாணியிலான திரைப்படங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

"அரசாங்கத்திற்கு ஆதரவான திரைப்படங்களை உருவாக்கவும், நம் நாட்டின் தலைவர்களின் முயற்சிகளை பாராட்டி திரைப்படங்களை உருவாக்கவும் ஒரு சில இந்திய திரைப்பட கலைஞர்கள் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நிதியுதவியும் கிடைக்கிறது. இந்த மாதிரியான பிரசார பாணியிலான திரைப்படங்களை உருவாக்கினால் அவர்கள் சுத்தமானவர்கள் என்று அங்கீகரிக்கப்படுகிறார்கள். இந்த பாணியிலான பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசியவர், "ஒரு முஸ்லிம் என்பதற்காக சினிமா தொழில்துறையில் எந்தப் பாகுபாடுகளையும் இதுவரை நான் உணர்ந்ததில்லை. அதேநேரம் மற்ற நடிகர்கள் தங்கள் மனதில் பட்டதை பேசுவதற்காகத் துன்புறுத்தப்படுகின்றனர். இதே நிலைதான் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான மூன்று கான் நடிகர்களுக்கும் (ஷாரூக், சல்மான், அமீர்) இருக்கிறது. தாங்கள் துன்புறுத்தப்படுவதற்கான நிலைமை இருப்பதால் மூவரும் கவலைப்படுகிறார்கள். நான் குறிப்பிடுவது வெறும் நிதி துன்புறுத்தல் மட்டுமில்லை.

அவர்கள் இழப்பதற்கு நிறைய இருக்கிறது. இதனால்தான் அவர்கள் பேச மறுக்கிறார்கள். தைரியமாக பேசும் எவரும் துன்புறுத்தலுக்கு உள்ளாவார்கள். வலதுசாரி மனநிலைக்கு எதிராக யார் பேசினாலும் இது நடக்கும்" என்று கூறியிருக்கிறார் நசீருதீன் ஷா. இந்தக் கருத்துகள் பாலிவுட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.