சினிமா

இந்தி நடிகர் காதர் கான் காலமானார்

webteam

உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்தி நடிகர் காதர் கான் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 81.

பிரபல இந்தி நடிகர் காதர் கான். இவர் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். காமெடி, குணசித்திரம், வில்லன் என பல வேடங்களில் நடித்துள்ள இவர், கனடாவில் இப்போது இருக்கிறார். கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்றிருந்த இவர், அதற்காக டொரண்டோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப்பெற்று வந்தார். 

இதைக் கேள்விபட்ட இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அமிதாப் பச்சன் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 

இதையடுத்து பல நடிகர், நடிகைகள் அவர் நலம்பெற பிரார்த்திப்பதாகக் கூறியிருந்தனர்.இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.

இதை அவர் மகனும்  இந்தி நடிகருமான சர்பிராஸ் கான் நேற்று மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதை அவர் குடும்பத்தினர் உறுதி படுத்தியுள்ளனர்.  அவரது இறுதிச்சடங்கு டொரண்டோவில் இன்று மாலை நடக்கிறது. 

காதர்கான், ஆப்கானிஸ்தானின் காபூலில் பிறந்தவர். மும்பையில் சிவில் என்ஜினீயர் படிப்பை முடித்த அவர், 1973 ம் ஆண்டு ராஜேஷ் கண்ணாவின் ’தாக்’ என்ற படம் மூலம் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார்.