சினிமா

‘இட ஒதுக்கீடு முறையை பொருளாதார ரீதியில் கொடுப்பேன்; சாதி ரீதியில் அல்ல’ - வெங்கி அட்லூரி

சங்கீதா

சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றும், பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டைத் தான் கொடுக்க வேண்டும் என்று ‘வாத்தி’ பட இயக்குநர் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

சமூகத்திற்கு சேவையாக இருக்க வேண்டிய கல்வியில் நடக்கும் வியாபார அரசியலை மையமாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக வெளிவந்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக யூட்யூப் தளத்தில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசிய விஷயம் விவாதத்தை கிளப்பியுள்ளது.


‘PREMA the Journalist’ என்ற யூட்யூப் தளத்துக்கு ‘வாத்தி’ படம் தொடர்பான பல விஷயங்களை பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரியிடம், ‘நீங்கள் மத்திய கல்வி அமைச்சரானால் கல்வி அமைப்பில் என்ன முடிவெடுப்பீர்கள்’ எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வெங்கி அட்லூரி, "என்னுடைய பதில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தலாம். இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன். இட ஒதுக்கீடு முறையை பொருளாதார ரீதியில் கொடுப்பேன். சாதி ரீதியில் அல்ல" என்று தெரிவித்துள்ளது சமூகவலைத்தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.