சினிமா

‘வேலையில்லா பட்டதாரி’ பட வழக்கு - ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு விலக்கு அளித்து உத்தரவு

சங்கீதா

'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை ஆஜராவதிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில், புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தொடர்பான விதிகளை மீறி காட்சிகள் உள்ளதாக தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், இந்தப் படத்தினை தயாரித்த நிறுவனமான வுண்டர்பாரின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரும் நாளை ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐஸ்வர்யாவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை (ஜூலை 15) ஆஜராக விலக்கு அளித்து, வழக்கை இறுதி விசாரணைக்காக அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் தனுஷ் முறையிட இருப்பதாகவும், தற்போது அவர் வெளிநாடு சென்றுள்ளதால், சென்னை திரும்பிய பிறகு கையெழுத்து பெற்று, மனுத் தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.