சினிமா

7 நாட்களில் ரூ. 200 கோடியை கடந்து வசூலில் தூள் கிளப்பும் ‘வாரிசு’ - ‘துணிவு’ நிலவரம் என்ன?

சங்கீதா

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் 7 நாட்களில் சுமார் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இதில், விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு முதலில் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும், பின்னர் கலவையான விமர்சனங்கள் கிடைக்கத் துவங்கிய நிலையில், பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. மேலும் தெலுங்கிலும், இந்தியிலும் டப் செய்யப்பட்டு ஒரு சில நாட்கள் கழித்து வெளியிடப்பட்ட நிலையில், அங்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், ‘வாரிசு’ திரைப்படம் 7 நாட்களில் சுமார் ரூ. 213.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 89.4 கோடியும், இந்திய அளவில் 141.7 கோடியும், வெளிநாடுகளில் 71.8 கோடியும் வசூலித்துள்ளது. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு மட்டுமே ரூ.10.3 கோடி வசூலித்துள்ளது. அதேநேரத்தில் அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்கள் கிடைத்து வந்தது. இந்தப் படம் 7 நாட்களில் ரூ. 151.8 கோடி வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ. 104.09 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 84.45 கோடியும் வசூலித்துள்ளது.

இந்த ஆண்டில் வெளியான இரண்டு நடிகர்களின் படங்களும் தமிழ்நாட்டில் மட்டுமே தலா ரூ.100 கோடியை நெருங்க உள்ளது. இதனால், தமிழ் திரையலகம் மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் 2023-ம் ஆண்டின் முதல் ரூ.150 கோடி வசூலை கடந்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.