சினிமா

சக்கப்போடு போடும் துணிவு... சொல்லியடிக்கும் வாரிசு! பொங்கல் ரேஸில் முந்தியது யார்?

சக்கப்போடு போடும் துணிவு... சொல்லியடிக்கும் வாரிசு! பொங்கல் ரேஸில் முந்தியது யார்?

webteam

பொங்கல் விருந்தாக வெளிவந்த படங்களில் ‘துணிவு’ தமிழ்நாட்டிலும், ‘வாரிசு’ பிற இடங்களிலும் வசூல் மழை பொழிந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படமும், நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வசூல் சாதனையில் அஜித்தின் ’துணிவு’ படம் முதல் இடத்தில் இருப்பதாகவும், இரண்டாவது இடத்தில் விஜய்யின் ‘வாரிசு’ இருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில், நிலவரம் தலைகீழாக இருக்கிறதாம்!

5 நாட்களில் உலக அளவில் வசூல்:

இந்த இரண்டு படங்களும் 11ஆம் தேதி வெளியான நிலையில், வாரிசு திரைப்படம் தமிழ் மட்டுமன்றி இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. அதில் இந்தி மற்றும் தெலுங்கில் வாரிசு படம், வார இறுதிநாளான நேற்றைய தினம் வசூலை வாரிக்குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் வெளியான பின்னான முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒருநாளில் மட்டும், ரு.18.50 கோடியை வாரிசு திரைப்படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது மட்டுமன்றி, வாரிசு படம் தமிழ், தெலுங்கை விடவும் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. வெள்ளிக்கிழமை ரூ.79 லட்ச வசூலை செய்திருந்த வாரிசு இந்தி வெர்ஷன், சனிக்கிழமை ரூ.1.55 கோடியையும், சனிக்கிழமை 1.54 கோடியையும் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி 3 நாள்களில் ரூ.3.88 கோடியை பெற்றுள்ளதாம் வாரிசு இந்தி வெர்ஷன்!

தெலுங்கிலும் 303 ஸ்க்ரீன்கள் வாரிசுடு வெளியாகி, அங்கும் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. சங்கராந்தி இரண்டு நாள்களில் மட்டும், அப்படம் ரூ.6.4 கோடி வசூல் அள்ளியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதனால் கடந்த 5 நாட்களில் வாரிசு படம் உலக அளவில் எல்லா மொழிகளிலும் பெற்ற வசூலின்மூலம் ரூ.150 கோடியை தாண்டியிருக்கிறது. இதை தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. `ஆட்டநாயகன்’ என்றும் `மெகா ப்ளாக்பஸ்டர்’ என்றும் வாரிசு படத்தை தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு பக்கம் ’துணிவு’ படம், இந்தியில் இன்னும் வெளியாகவில்லை. இதனால் உலக அளவில் ரூ.100 கோடியை படம் தாண்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் ரூ. 11.50 கோடி வசூலித்திருக்கிறது.

தமிழ்நாடு வசூல் நிலவரம்:

தமிழ்நாட்டில் மட்டும் ‘துணிவு’ படம் ரூ.55 கோடியையும், ‘வாரிசு’ படம் ரூ.53 கோடியை வசூல் செய்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே ‘துணிவு’ படமும் வசூலில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ‘வாரிசு’ படம் நல்ல வசூலைப் பார்த்து வருகிறது.

பிற இடங்களில் வசூல்

இதேபோல கேரளாவில் ’வாரிசு’ ரூ.7 கோடியையும், ’துணிவு’ ரூ. 2.75 கோடியையும் கர்நாடகத்தில் ’வாரிசு’ ரூ. 9 கோடியையும், ’துணிவு’ ரூ. 8 கோடியையும், வடமாநிலங்களில் ’வாரிசு’ ரூ. 2.5 கோடியையும், ’துணிவு’ ரூ.1.5 கோடியையும், வெளிநாடுகளில் ’வாரிசு’ ரூ. 45 கோடியையும், ‘துணிவு’ ரூ.35 கோடியையும் வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வசூலுக்கான காரணம் என்ன?

தமிழ்நாட்டில் ‘துணிவு’ படம் முன்னணியில் இருந்தாலும், உலக அளவில் ’துணிவை’விட ’வாரிசு’ திரைப்படமே அதிக வசூலை குவித்துள்ளது. தமிழ்நாட்டில் ’துணிவு’ படம் வசூலில் வாரிக் குவிப்பதற்கு, அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதும், பிற இடங்களில் ‘வாரிசு’ வசூல் மழை பொழிவதற்கு, அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதும் காரணமாகச் சொல்லப்படுகிறது.