சினிமா

சத்தமில்லாமல் ‘மெர்சல்’ படத்தை முந்திய ‘வாரிசு’.. பிகில் ரெக்கார்ட்டை முறியடிக்குமா?

சங்கீதா

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம், அவரது முந்தையப் படங்களில் ஒன்றான ‘மெர்சல்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

கடந்த 11-ம் தேதி அஜித்தின் ‘துணிவு’ படத்துடன் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த திரைப்படம் விஜய்யின் ‘வாரிசு’. படம் வெளிவந்த முதல் 2 நாட்கள் சீரியல் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதையெல்லாம் முறியடித்து இந்தப் படம் தற்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது. சொல்லப்போனால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்பது போல், குடும்ப ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளதால், எதிர்மறை விமர்சனங்களை தவிடுபொடியாக்கி 11 நாட்களிலேயே 250 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலித்திருந்தது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருந்தது.

இந்நிலையில், விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான ‘மெர்சல்’ படத்தின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது. 14 நாட்களில் ‘வாரிசு’ திரைப்படம் 268.32 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், ‘மெர்சல்’ திரைப்படம் 260 கோடி ரூபாய் அப்போது வசூலித்திருந்தது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தின் வசூலையும் முந்தியுள்ளது.

விஜய்யின் ரூ. 200 கோடி வசூல் படங்கள்

1. பிகில் - ரூ. 305 கோடி (2019)

2. வாரிசு - ரூ. 268.32கோடி (2023)* (14 Days Collection - Still Running)

3. மெர்சல் - ரூ. 260 கோடி (2017)

4. சர்கார் - ரூ. 243 கோடி (2018)

5. பீஸ்ட் - ரூ. 236 கோடி (2022)

6. மாஸ்டர் - ரூ. 230 கோடி (2021)

இதற்கிடையில், ‘வாரிசு’ படத்தின் வெற்றியை அப் படக்குழுவினர் கொண்டாடியுள்ள புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, ராதிகா, சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் வம்சி பைடிபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் உள்ளனர்.

எனினும், ‘வாரிசு’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால், 300 கோடி ரூபாயை படத்தின் வசூல் தொட்டால்தான் லாபமானப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.