சினிமா

“என் மனைவியால்தான் அஜித் அறிமுகம் கிடைத்தது” - போனி கபூர் உருக்கம்

“என் மனைவியால்தான் அஜித் அறிமுகம் கிடைத்தது” - போனி கபூர் உருக்கம்

webteam

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தனது மனைவி குறித்து உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் போனி கபூர் தயாரிப்பாளராக அறிமுகமானவர். இவரது மனைவி ஸ்ரீதேவியின் விருப்பத்தின் பேரில்தான் அஜித், ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடித்தார். இதுகுறித்து ஏற்கெனவே போனி கபூர் அவரது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அஜித்தை வைத்து இவர் ‘வலிமை’ படத்தினை தயாரித்து வருகிறார். பிறமாநிலத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரின் படத்தில் அஜித் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அதுவும் அடுத்தடுத்து நடிக்கின்றார். ஆகவே எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது.

இந்நிலையில் ஒரு விருது விழாவில் போனி கபூர் கலந்து கொண்டார். அப்போது அவர் சில உணர்வுப்பூர்வமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது, “ரொம்ப நல்லவிதமாக படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. இதில் அதிகமான கமர்ஷியல் இருக்கும். மேலும் அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும். அஜித்தை மேலும் இந்தப் படம் அதிகமாக தெரியவைக்கும். அவருடைய அதிகமான சாகசத்தை பார்க்கலாம். அதிமான எமோஷ்னலை பார்க்கலாம். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அவருடைய ரசிகர்கள் அதிகபடியான ஆதரவை அளித்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான ட்வீஸ் போட்டு அதனை ஆதரித்து வருகின்றனர். அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இதற்காக என் மனைவிக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அவர்தான் அஜித்துடன் எனக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தி தந்தார். முழுமையாக நான் தமிழ் சினிமா துறையில் இயங்க இருக்கிறேன்.

மேலும் தெலுங்கிலும் இயங்க இருக்கிறேன். முடிந்தால், மலையாள திரை உலகிலும் படங்களை தயாரிக்க இருக்கிறேன். என் இதயம் தென்னிந்தியாவில்தான் இருக்கிறது. ஏனெனில் என் மனைவி தென்னிந்தியாவை சார்ந்தவர். அவர்தான் நான் தென்னிந்திய பட உலகில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இப்போது அவரால்தான் நான் இங்கு இருக்கிறேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாக அவர் கூறினார்.