தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வடசென்னை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. ரூபாய் 80 கோடி பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என தனுஷ் கடந்த 3-ம் தேதி அறிவித்திருந்தார். மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் இது நிகழ்வதாகவும் தனுஷ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘வடசென்னை’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மொத்தமாக இரண்டு போஸ்டர்களை தனுஷ் அதில் வெளியிட்டுள்ளார். ஒரு போஸ்டரில் போலீஸ் வண்டியில் இருந்து சிரித்தபடி இறங்கி வருவதுபோல் நடிகர் தனுஷ் காட்சியளிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் இரட்டை சடைபோட்டு பிரமாதமான கெட்டப்பில் இருக்கிறார். இந்த போஸ்டருக்கு கேப்சன் கொடுத்துள்ள தனுஷ், ‘அன்பு’ என்பது இவனின் பெயர் மட்டுமல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போஸ்டரில், வாயில் கத்தியை வைத்தப்படியும், கயிற்றை பிடித்து இழுத்தப்படியும் தனுஷ் இருக்கிறார். இந்த போஸ்டர்களுக்கு இணையத்தில் அதிக வரவேற்பு உள்ளது. இதுமட்டுமில்லாமல் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைதொடர்ந்து, #VadaChennai ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.