சினிமா

'பெயருக்குப் பின்னால் சாதிய அடையாளம் எதற்கு?' - ‘வாத்தி’ ஹீரோயின் சொன்னப் பதில்

சங்கீதா

தனதுப் பெயருக்கு பின்னால் உள்ள சாதிய அடையாளத்தை, தான் நடிக்கும் படங்களில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்று நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார்.

‘நானே வருவேன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளப் படம் ‘வாத்தி’. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை, சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘சார்’ என்றப் பெயரில் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

கல்வியை மையமாக கொண்டு தயாராகியுள்ள இந்தப் படத்தில், தனுஷுடன், சம்யுக்தா மேனன், பி. சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 17-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘வாத்தி’ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சம்யுக்தா மேனன், “நான் பாலாக்காடு பெண் என்றாலும், தமிழில் பேசுவேன். எனக்குப் பிடித்த மொழி தமிழ்மொழி.

பெயருக்குப் பின்னால் உள்ள சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், ‘வாத்தி’ படம் உள்பட எந்தப் படத்திலும், என் பெயருக்குப் பின்னால் உள்ள மேனன் என்ற சாதிப் பெயர் இருக்காது. அதனை நீக்குமாறு ஏற்கனவே கூறியுள்ளேன். பத்திரிகையாளர்களும் என்னை சம்யுக்தா என்று கூப்பிடவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ‘பாப்கார்ன்’ மலையாளம் படம் மூலம் அறிமுகமான சம்யுக்தா தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.