ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்துடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
‘தர்பார்’ படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் ரஜினி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். நவம்பர் இறுதியில் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அவர் இமயமலைக்கு பயணம் புறப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து நேற்று காலையில் விமானத்தில் மும்பை சென்ற ரஜினி, அங்கிருந்து டேராடூன் சென்றார்.
கடந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் சூட்டிங் முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ரஜினி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இமயமலை பயணத்தை ரத்து செய்தார். 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ‘காலா’ ,‘ 2.o’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்குச் சென்றார். தற்போது ‘தர்பார்’ படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில், ஆன்மிக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் பக்தர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.