பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக நடிக்கிறார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று இந்தப் படம் குறித்தான அறிவிப்பும் வெளியானது. மோடிக்கும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடிக்கும் இடையேயான பாசப்பிணைப்பை பற்றிய படமாக உருவாகிறது இப்படம். இன்று உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிப்பது குறித்து பேசியிருக்கும் உன்னி முகுந்தன், "மரியாதைக்குரிய இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களாக 'மா வந்தே' படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல! பெரிய பொறுப்பு. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன். மேலும் ஒரு விஷயத்தில் இருந்து எப்போதும் பின்வாங்கக் கூடாது என என்னிடம் மோடி சொன்னதை தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையிலும் பின்பற்றுவேன்" என கூறியுள்ளார்.
கிராந்தி குமார் இயக்கம், ரவி பஸ்ரூர் இசை கே. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு, சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பு என பிரம்மாண்ட குழுவினரின் கூட்டணியில் உருவாகும் இப்படம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு 'மா வந்தே' வெளியாக உள்ளது. இது தவிர உன்னி முகுந்தன் நடிப்பில் மேலும் இரண்டு இந்தி படங்களை தயாரிக்க உள்ளது ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். அதற்கான அறிவிப்பும் இன்று வெளியானது.