சினிமா

``நான் நடிப்பதே இல்லை; இன்னும் நான் நடிக்க தொடங்கவேயில்லை”- நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

webteam

சென்னையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், நாயகி நிதி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர்கள் சுந்தர் சி, மிஷ்கின், மாரி செல்வராஜ், ராஜேஷ், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலகத் தலைவன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் கொண்டாடினர். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த படத்தை தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளி வருகிறது. ஆனால் படம் சூட்டிங் 70 நாள் மட்டும் நடித்துள்ளேன். அதிக நாட்கள் ஆனதால் இந்த படம் நடித்ததையே மறந்துவிட்டேன். இதன்பிறகு தொடங்கியபடம் நெஞ்சுக்கு நீதி. அந்த படமே வெளிவந்துவிட்டது. கலகத் தலைவன் படம் நவம்பர் 18 ஆம் தேதி வெளிவருகிறது. நெஞ்சுக்கு நீதி போல இந்த படமும் வெற்றி பெறும்.

இந்த படத்தில் சண்டை காட்சிகளில் என்னைவிட அதிகமாக அடி வாங்கியது கதாநாயகி நிதி அகர்வால் தான்‌. இதன்பிறகு நிதி அகர்வால் தமிழ் சினிமாவில் படம் நடிப்பாங்கலானு தெரியலை. கஷ்டப்பட்டு நடித்துள்ளார். மிஷ்கினின் முதல் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. முடியவில்லை. பின்னர் தான் சைகோ படத்தில் நடித்தேன். ஆனால் பாதி பகுதிகளில் அந்தப் படத்துல நான் நடிக்கவே இல்லை. என்னை மாதிரி உடலமைப்பு இருக்கவங்களை வச்சு பாதி படம் எடுத்துட்டாங்க. அதுதான் உண்மை. டப்பிங்ல தான் எனக்கு அது தெரிஞ்சுது. மிஷ்கின் சார், பெரும்பாலும் காலுக்கு தான் கேமிரா வப்பார். அதுனால நானும், `நீங்க இன்னைக்கு காலுக்கு கேமரா வைங்க சார்’னு சொல்லிட்டு பிரச்சாரத்துக்கு போயிடுவேன். 

மகிழ் திருமேனி படங்களில் எப்போதும் பரபரப்பு இருக்கும். இந்த படமும் அப்படி இருக்கும். தமிழ் சினிமாவை நான் தான் தூக்கி பிடித்த மாறி `நடிக்கிறத விட்டுடாதீங்க’னு பலரும் பேசுறாங்க. ஆனால் நான் நடிப்பதே இல்லை; இன்னும் நான் நடிக்க தொடங்கவேயில்லை. என்னோட நடிப்பை பத்தி மாரி செல்வராஜ் சார்கிட்ட கேட்டா தெரியும். மாமன்னன் படப்பிடிப்பு தொடங்கி கொஞ்ச நாளுக்கு பிறகு, நானே அவர்கிட்ட போய் என் நடிப்பு பத்தி கேட்டேன். அவர் ஒரே வரில, `இருங்க சார், இன்னுமொரு பத்து நாள் போகட்டும். பார்த்துட்டு சொல்றேன்’னு சொல்லிட்டார். அப்டிதான் இருக்கு என் நடிப்பும்” என்று பேசினார்.

மேலும் பேசுகையில், “இந்தப் படத்துக்கான (கலகத்தலைவன்) வேலைகள், 2019-ல் தொடங்கப்பட்டது. அந்தவகையில் மூன்று வருடங்களாக படத்துக்காக உழைத்து வர்றோம். இடையே, இந்தப் படத்தில் நடித்ததையே கூட சில நேரங்கள்ல மறந்துட்டேன். மகிழ் சார்தான் திருப்பி கூப்பிட்டு பணிகளை நியாபகப்படுத்தினார் எனக்கு. ரொம்ப பொறுமையா, ரசிச்சு ரசிச்சு படமெடுப்பார் மகிழ். ஒரு ஷாட் தான்... ஆனா, 30 டேக் வச்சிடுவார். இந்தப் படத்துக்கூட பரவாயில்ல. 70 நாள்கள்ல படப்பிடிப்பு முடிஞ்சுது. இப்பவும் கூட, மகிழ் தன்னோட படத்தை செதுக்கிட்டேதான் இருந்தார். ரிலீஸ் தேதி தள்ளிப்போனா, இன்னும்கூட செதுக்குவார் அவர். நான்தான், இதுவே போதும்னு சொல்லிட்டேன். மகிழோட படங்களுக்கு நான் பெரிய ரசிகன். தடம் படம், நான் பண்ண வேண்டியது. மிஸ் ஆகிடுச்சு. அதுனாலதான் கலகத்தலைவன் படத்தை உடனே ஸ்டார்ட் பண்னிட சொன்னேன்.

கலகத்தலைவன் படத்துக்குக்கூட 70 நாள்கள்தான் படப்பிடிப்பு. இப்போ நடிக்கிற மாமன்னன் படத்துக்கு, 120 நாள்கள் படப்பிடிப்பு. இன்னும் படப்பிடிப்பு அந்தப் படத்துக்கு முடியல. அந்தப் படத்துக்கு போன பிறகு, `அடடா மகிழ் பரவாயில்லயே’னு கூட நினைச்சிருக்கேன். மாரி செல்வராஜ் சாருக்கும் என்னைய அவ்ளோ பிடிக்கும். இவங்களுக்கு நடுவுல, அருண்ராஜா காமராஜ் எடுத்த `நெஞ்சுக்கு நீதி’ படம்தான் 40 நாள்கள்ல முடிஞ்சிருச்சு. மாமன்னன் முடிச்ச பிறகு, நெஞ்சுக்கு நீதி - 2, மாமன்னன் 2 லாம் எடுக்கப்போறதா மாரி செல்வராஜ், அருண்ராஜாலாம் சொன்னாங்க. அருண் ஒருபடி மேல போய், சைக்கோ 2 படம் நடிக்க சொன்னார். அநேகமா மாமன்னன் முடிஞ்சதும், செல்ஃபோன் நம்பர் மாத்திட்டு எஸ்கேப் ஆனாலும் ஆகிடுவேன்” என்று கலகலத்தார்.

கலகத்தலைவன் படத்தின் ட்ரைலர்: