மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மிஷ்கினின் ’சைக்கோ’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் ‘கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், மகிழ் திருமேனியுடன் பெயரிடாதப்படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். தற்போது திரைப்பட படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், மகிழ் திருமேனி இயக்கும் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஏற்கனவே 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்திற்கு பிசாசு படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
’தடையற தாக்க’, ’மீகாமன்’, ’தடம்’ என தமிழ் சினிமாவில் தனெக்கென தனி பாணியை கடைப்பிடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இயக்குநர் செல்வராகவன், கெளதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்ததாலேயே இவரது கதைகளும் வித்யாசமானவைதான். உதயநிதி படத்திற்காக விஜய்யின் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை மகிழ் திருமேனி தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.