சினிமா

"சினிமாவை நான் தேர்வு செய்யவில்லை; சினிமாதான் என்னைத் தேர்ந்தெடுத்தது!" - உதயநிதி பேட்டி

"சினிமாவை நான் தேர்வு செய்யவில்லை; சினிமாதான் என்னைத் தேர்ந்தெடுத்தது!" - உதயநிதி பேட்டி

webteam

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார், திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலின். தனது தொகுதியில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார் உதயநிதி. இதற்கிடையே, சினிமா பணிகளையும் தொடர்ந்து வருகிறார். சினிமா, அரசியல் பிரவேசம் தொடர்பாக 'இந்தியா டுடே'வுக்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியிருக்கிறார்.

'நீங்கள் ஏன் முதலில் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, ``நான் சினிமாவைத் தேர்வு செய்யவில்லை. சினிமாதான் என்னைத் தேர்ந்தெடுத்தது. எனது குடும்பத்தில் பலர் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். என் தாத்தா கருணாநிதி சினிமாவில் இருந்தார். கதைகள், வசனங்களை எழுதினார். முரசொலி மாறன் மாமா பல திரைப்படங்களைத் தயாரித்து, திரைப்படங்களை எழுதி இயக்கியிருந்தார். மற்றொரு மாமா செல்வம் திரைப்படங்களில் நடித்திருந்தார். என் தந்தை திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார்.

எங்களிடம் பூம்பூகார் தயாரிப்பு நிறுவனம், மேகலா தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. அந்த நிறுவனத்தின் படங்கள் தயாரிப்பின்போது . நாங்கள் சென்று சினிமா படப்பிடிப்பு பார்ப்போம். எனவே, நான் ஒரு தயாரிப்பாளரானேன். ஆனால், நான் நடிக்க வந்ததற்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் காரணம். அவர் எப்போதும் அவரது திரைப்படங்களில் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பது வழக்கம். 'ஆதவன்' திரைப்பட படப்பிடிப்பின்போது, நான் துபாயில் இருந்தேன். அந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறினார். நானும் அவருடன் நடிக்க வேண்டும் என்றார். 'எனக்கு விருப்பமில்லை' என்றேன். ஆனால், நீங்கள் நடித்தே ஆகவேண்டும் என்றார். அதன்படி அவர் என்னை ஒரு காட்சியில் நடிக்க வைத்தார். கே.எஸ்.ரவிக்குமார் எனக்கு ஒரு நல்ல நண்பர். அதன் பிறகு பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கதைகள் சொல்ல ஆரம்பித்தனர். சரி முயற்சித்து பார்க்கலாம் என்று நினைத்து படங்களில் நடிக்கத் தொடங்கினேன். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அப்படித்தான் நடித்தேன்.

அந்தப் படம் சுமாரான வெற்றிபெறும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முதலில் நினைத்தோம். ஆனால், அது ஒரு சூப்பர் டூப்பர் வெற்றியாக மாறியது. அப்படித்தான் நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால், இளைஞர் பிரிவு செயலாளரான பிறகு, நான் அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதே பேட்டியில் நடிகர் கமல் மற்றும் ரஜினி அரசியல் தொடர்பாகவும் உதயநிதி பேசியிருக்கிறார்.

``எங்கள் முக்கிய எதிரி, அதிமுக மற்றும் பாஜக. நடிகர் கமல்ஹாசன் எங்களுக்கு பெரிய அச்சுறுத்தல் அல்ல. அவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. அவர் சினிமாவில் ஒரு மேதை. ஆனால் அரசியலில், அவர் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. திடீரென்று கலைஞரை அவமதித்தார். பின்னர் திடீரென்று தனது அறிக்கையில் தவறாகப் புரிந்து கொண்டனர் என்கிறார். அவர் கைதட்டலுக்காக இதையெல்லாம் செய்கிறார். அதனால்தான் நான் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

நடிகர் ரஜினியை பொறுத்தவரை, அவரை சிலர் அரசியலுக்குள் வரவழைக்க கட்டாயப்படுத்தியது அனைவருக்கும் தெரியும். அவரைத் தவிர, இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். ரஜினி ஒரு ஒரு சூப்பர் ஸ்டார். அவர் உடல்நலக் காரணங்களால் அரசியல் அறிவிப்பை வாபஸ் வாங்கினார். அவரது முடிவை நான் பாராட்டுகிறேன். அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

உங்கள் மகன் அரசியல் பற்றி விவாதிக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ``எனது மகன் இன்பா 2004-இல் பிறந்தார். இப்போது, அவர் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. 16 வயது இளைஞனின் ஆர்வம் மட்டுமே அவரிடம் உள்ளது. விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். நானும் என் மனைவியும் குழந்தைகளை எதையும் செய் என்று வற்புறுத்துவதில்லை. இது முடிவு செய்ய வேண்டிய நேரமும் அல்ல" என்று கூறியிருக்கிறார் உதயநிதி.