சினிமா

இந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை... நெட்டிசன் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்..!

webteam

தனது வீட்டில் இந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை இருப்பது குறித்து ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் மாதவன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். 

சுதந்திர தினம், ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றிற்கும் வாழ்த்து தெரிவித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் ஒரு புகைப்படத்தையும் அதில் இணைத்திருந்தார். அந்தப் படத்தை எடுத்து ட்விட்டர் வாசி ஒருவர், மாதவனிடம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். 

அதில் அவர், “இந்தப் படத்தில் உங்களுக்கு பின்னால் இந்து கடவுள்களின் அருகில் சிலுவை உள்ளதே? அது ஏன்? கிறிஸ்துவ தேவாலயங்களில் இந்து கடவுள்களின் படங்கள் உள்ளதா? நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம்” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் இதற்கு நடிகர் மாதவன் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன், “உங்களை போன்றவர்களின் கருத்துகளுக்கு மரியாதை தரவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. ஏனென்றால் நீங்கள் முதலில் சரியான மனநிலையில் இல்லை. அந்தப் படத்தில் சிலுவைக்கு பக்கத்திலுள்ள பொற்கோயிலின் சிலையை நீங்கள் பார்க்க தவறிவிட்டீர்கள். அதைப் பார்த்திருந்தால் நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேனா? என்ற கேள்வியை எழுப்பியிருப்பீர்கள்.

இந்தப் பொருட்களில் பாதி நான் வாங்கியவை மீதி எனக்கு பரிசாக வந்தவை. எனக்கு சிறுவயதிலிருந்து ‘எம் மதமும் சம்மதம்’ என்று கற்றுத் தரப்பட்டுள்ளது. ஆகவே நான் அனைத்து மதங்களையும் என்னுடைய மதத்தை போல் மதிப்பேன். நான் தர்கா, குருதுவரா மற்றும் தேவாலயம் ஆகிய அனைத்து இடங்களிலும் பிரார்த்தனை செய்துள்ளேன். இந்த இடங்களில் எல்லாம் எனக்கு நிறையவே அன்பு கிடைத்துள்ளது. எனவே இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு தான். அந்த அன்பையும் அமைதியையும் நான் உங்களுக்கும் தருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.