கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள படம் `டாக்சிக்'. 2023ல் துவங்கப்பட்ட இந்தப் படம் மூன்றாண்டுகள் கழித்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா எனப் பலரும் நடித்துள்ளனர். முதலில் இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 25 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பில் நடந்த தாமதங்கள் காரணமாக, மார்ச் 19 வெளியீடு என அறிவிக்கப்பட்டது.
யஷ் பிறந்தநாளில் அவர் நடித்துள்ள ராயா கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் இருந்த காட்சிகள் சில சர்ச்சைகளையும் கிளப்பியது. அதன் பின்னர் நேற்று இப்படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டது. அதில் யஷ் நடித்துள்ள இன்னொரு பாத்திரமான `டிக்கெட்' என்ற கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தினார். இதில் அப்பா, மகன் என இரு பாத்திரங்களில் நடித்துள்ளார் யஷ். `கே ஜி எஃப்' படத்துக்கு பின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக யஷ் படம் எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்தப் படத்தை சோலோ ரிலீஸ் ஆக கொண்டு வர நினைத்தது KVN நிறுவனம். கூடவே இதே நிறுவனம் தயாரித்த விஜயின் `ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியிட முடியாமல் போனது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தையும் `டாக்சிக்' மூலம் தான் சரிக்கட்ட வேண்டும் என திட்டமிட்டது.
ஆனால் குறுக்க இந்த கௌஷிக் வந்தா என்பது போல வந்தது ரன்வீர் சிங் நடித்துள்ள `துரந்தர் தி ரிவென்ஞ்'. கடந்த ஆண்டு இறுதியில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான ஸ்பை த்ரில்லர் படம் `துரந்தர்'. இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. உலகளவில் 1300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் இறுதியில் அடுத்த பாகத்துக்கு லீட் வைத்து முடித்திருந்தனர். அதிலேயே இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே ஒரு வருடமாக மார்ச் 19ம் தேதியை டார்கெட் செய்து வைத்திருந்த `டாக்சிக்' படத்துக்கு போட்டியாக, அதேநாளில் `துரந்தர் தி ரிவென்ஞ்' படமும் வருகிறது. படம் எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்து இந்தப் படம் ஹிட் என்பது இருக்கிறது என்றாலும், படத்தின் ஓப்பனிங் பொறுத்தவரை `டாக்சிக்' பெரிய சரிவை சந்திக்கும். ஏனெனில் `துரந்தர் தி ரிவென்ஞ்' படத்துக்கு தான் பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்கும். இரு படங்களில் எது வெல்லும் அல்லது இரண்டுமே வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.