மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ்க்கு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் நடித்த ஏபிசிடி, என்னு நிண்டே மொய்தீன், கோதா, அபியம் அனுவும், வைரஸ் மற்றும் மாயநதி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
மேலும் தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை வி.எஸ் ரோகித் என்பவர் இயக்கி வருகிறார். டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டோவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மேலாளர் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் பிஆர்ஓ நிகில் முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டோவினோ தாமஸ் காலா படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இந்த விபத்து ஏற்பட்டது. முதலில் சிறுகாயமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் தாங்கமுடியாத வலி அவருக்கு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.