அருண்விஜய், சுவலட்சுமி இணைந்து நடித்திருந்த கண்ணால் பேசவா படத்தில் தேவாவின் இசையில் இடம்பெற்ற ‘கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே… கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே...’ என்ற பாடலானது வரிகளுக்கான பாட்டா அல்லது இசைக்கான வரிகளா என மெச்சிக்கொள்ளும் வகையில் அவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டிருக்கும்.
ஹரிஹரன், சுஜாதா என இரண்டு வெர்சன்களும் ரசிக்கப்படியாக அமைந்திருக்கும் இந்தப்பாடல், குழந்தைகளை தூங்கவைக்கும் தாலாட்டு பாட்டாக இன்றுவரை இருந்துவருகிறது. அதிலும் இப்பாடலின் தொடக்கத்தில் வரும் ’தன்னன்னானே.. தன்னன்னானே..’ என்ற ஹம்மிங்கிற்கே தனி ரசிகர் படை இருக்கிறது.
என் ஆசை மச்சான் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் தேவாவின் இசையில் காலத்தாலும் அழிக்கமுடியாத தாலாட்டு பாடலாக தமிழ் சமூகத்தில் இடம்பெற்றுள்ளது. இசைக்கு ஒருபடி மேலே சென்று வரிகளால் மயக்குகிறேன் என வாலியும், தேவாவும் போட்டிப்போட்டுக்கொண்டு இசைவிருந்தையே கொடுத்திருப்பார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் போட்டியாக சித்ரா, அவருடைய கொஞ்சல் குரலில் நம்மை மயக்கியே விடுவார். இன்றுவரை குழந்தைகளை தூங்க வைக்கும் தாலாட்டு பாடலாக தாய்மார்கள் பாடிவருகின்றனர்.
மனுநீதி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எங்கூருக்கு மட்டும் பத்து நிலா’ பாடல் அவ்வளவு இனிமையான பாடலாகும். ஒன்றரை நிமிடங்களே இந்தப்பாடல் இடம்பெற்றாலும் நம்மை மயக்காமல் இருந்துவிடவில்லை. குழந்தைகளை கொஞ்சும் விதமாக இடம்பெற்ற இந்தப்பாடலுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை கேட்காதவர்கள் கேட்டுவிடுங்கள்..
ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல், ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இருக்கும் ஆறாத ரணத்தையும் ஆற்றும் வல்லமை கொண்ட பாடலாகும். இரவுநேர பயணத்தில் இந்தப்பாடலை ஒலிக்கவிட்டு கண்களை மூடிக்கொண்டால் தேவாவும், எஸ்பிபியும் நம்மை வேறொரு உலகத்திற்கே அழைத்துச்சென்றுவிடுவார்கள்..
தாய் மனசு படத்தில் இடம்பெற்ற தூதுவளை இலை அரைச்சு பாடலை தெரிந்தவர்களுக்கு ‘தாய்மனசு தங்கம்’ பாடல் அவ்வளவு எளிதில் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் அம்மாவை நேசிக்கக்கூடிய ஒவ்வொரு மகனாலும் மறக்கமுடியாத ஒரு பாடலை விருந்தாக படைத்திருப்பார் தேவா. அதிலும் அந்த பாடலின் ராகமும், பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கவிடும் புல்லாங்குழலும் நம்மை ஏதோ செய்துவிடும். மலேசியா வாசுதேவன் குரலில் இதுஒரு ’தேவராகம்..’
என் ஆசை ராசாவே திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் முத்தான பாடல்கள் தான் என்றாலும், மலேசியா வாசுதேவனும் தேவாவும் சேர்ந்து செய்த காலத்தால் அழிக்கமுடியாத சம்பவம் தான் ‘தெற்கு திசை காத்து’ பாடல். மகனுக்கு அப்பா பாடும் இந்த தாலாட்டை என்னவென்று சொல்ல, தேவாவின் தேவராகத்தில் இதற்கென தனி இடம் உண்டு.
யேசுதாஸ் மற்றும் தேவா இணைந்து ஒரு மறக்கமுடியாத இசைவிருந்தை கொடுத்த பாடல் தான் ‘ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்’.. நாடோடி காதல் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலில் வரும் பெண் குரலும்,
’ஏழைமக வீட்டுக்குள்ள
ஏலம்போரையா வந்தவனே
வாழையடி வாழையென
வளர்ந்து வரும் சந்திரனே
பால்வடியும் பூ முகத்தில்
நீர் வடியக்கூடாது
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா
பெத்தமனம் தாங்காது
கண்மணியே கண்மணியே
கண் உறங்கு கண் உறங்கு’
பாடல் வரிகளும் நம்மை ஆரம்பத்திலேயே கட்டிப்போட்டுவிடும். அதற்குபிறகு யேசுதாஸ் செய்யும் சம்பவம் தான் காலத்தாலும் அழியாமல் வைத்துள்ளது. ’ஆண்டவனும் நானும் இங்கே அண்ணன் தம்பி கேளு புள்ள, அவனுக்கும் என்ன போல அப்பா அம்மா யாருமில்ல’ என்ற வரிகளும் தேவதூதனின் குரலும் நம்மை ஆட்கொண்டுவிடும்.
காந்தி பிறந்த மண் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆலமரத்துல பாடல், தேவாவின் இசையிலும், எஸ்பிபி குரலில் இன்றளவும் மறக்கமுடியாத ஒருபாடலாக இருந்துவருகிறது. அதிலும் எஸ்பிபி இழையவிடும் சோகமும், அதை ஆற்றுப்படுத்தும் விதமும் நம்மை இப்பாடலோடு கட்டிப்போடும். இப்பாடல் குழந்தைகளை தூங்கவைப்பதோடு, பிரிவால் வாடும் மனங்களையும் ஆற்றுப்படுத்துகிறது.
நடிகர் அஜித்குமார் ரெட் திரைப்படத்தின் ஆல்பவே சூப்பர் ஹிட் என்றாலும், திப்புவின் குரலில் இடம்பெற்ற ‘தாய்மடியே உன்னை தேடுகிறேன்’ பாடல் தாயை நேசிக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் மறக்கமுடியாத பாடலாகும். அதிலும் ’நீ கருவில் மூடி வைத்த
என் உடம்பு நடு தெருவில்
கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும்
காயங்களில் என் உயிரும்
ஒழுகும் உன்னை வாா்த்தாயோ
தெய்வங்கள் இங்கில்லை
உன்னை அழைக்கிறேன்’ என்ற வைரமுத்துவின் வரிகள் தாயை பிரிந்த அனைவரையும் அழவைத்தால், தேவாவின் இசை அவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும்.
வியாபாரி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்’ பாடலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் பாடலில் இடம்பெற்ற வரிகள் ஒவ்வொன்றும் சிறுவயதில் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஹரிஹரன் எப்போதும் போல அவருடைய வேலையை காட்டியிருப்பார்.
’பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பா
இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவை பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா’ என்ற வரிகளும், அதற்கு உயிர் கொடுக்கும் குரலும், மொத்தமாய் நம் உயிரை குடிக்கும் இசையும் ’தேவா’ என்னும் பொக்கிஷத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
இளவரசன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனி பொண்ணே ஆசை கண்ணே’ பாடல் சித்ராவின் இசையில் அமைந்த தாலாட்டு பாடலாகும். தேவாவின் இசையும் ‘ஆனி பொன்னே ஆசை கண்ணே, வானவில்லே மாணிக்கமே, பத்து திங்கள் கூடுகட்டி சிப்பி பெத்த ஒற்றை முத்தே, ஆரிராராரோ கண்ணே ஆரிராராரோ’ என்ற வரிகளும் ரசிக்கவைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
அதேபோல வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணே கரிசல் மண்ணு பூவே பாடல் யேசுதாஸின் குரலில் தாலாட்டும் வகையில் அமைந்திருக்கும்.