top 10 cinema news x page
சினிமா

Top 10 சினிமா | விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் To விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி வரை!

பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. ’சிக்கந்தர்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு

பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ’சிக்கந்தர்’ என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிடவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்தது.

ஹட்சன் மீக்

2. 16 வயது ஹாலிவுட் நடிகர் விபத்தில் பலி

’பேபி டிரைவர்’ திரைப்படத்தில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக். இந்தநிலையில், ஹட்சன் மீக் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி விழுந்தார். சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த மீக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சாலை விபத்தில் 16 வயது நடிகர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3. 'பயாஸ்கோப்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், அடுத்து இயக்கியிருக்கும் படம், 'பயாஸ்கோப்'. முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் கடந்த 22ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.

4. நாளை விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள், நாளை அனுசரிக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு அழைப்பு விடுத்து நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன். உடன் சுதிஷ் உள்ளிட்டோரும் இருந்தனர். இதையடுத்து, நாளை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

5. நாளை விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி

விஜய் ஆண்டனி, நாளை மாலை 6 மணிக்கு சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். இதில் அவரது பாடல்கள் பாடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

6. விலகிய ஸ்ரீலீலா.. இணைந்த மீனாட்சி சவுத்ரி!

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகரான நவீன் பொலிஷெட்டி, தற்போது நாக வம்சி தயாரிக்கும் 'அனகனக ஓக ராஜு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரி இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்புக்கான கால அட்டவணை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக, மீனாட்சி சவுத்ரி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

7. நானி படத்தின் போஸ்டர் வைரல்

தெலுங்கு நடிகர் நானி, அடுத்து 'ஹிட் 3' என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை, பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். இப்படம், அடுத்த ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படக்குழு, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் நானி குதிரையுடன் பனி நிறைந்த ஓர் இடத்தில் இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

8. ஜப்பானில் ரிலீஸாகும் ஜூனியர் என்.டி.ஆர் படம்

ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் 'தேவரா 1'. இப்படம், கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்த நிலையில், தற்போது ஜப்பானிலும் வெளியாக உள்ளது. அதன்படி, இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி ஜப்பானில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர்

9. பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை அவசியம்

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன்... மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம். தும்பைவிட்டு வாலை பிடிப்பதால் பயனில்லை. சட்டம் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை. இதில் ஒருவேளை அரசை குறை கூறினால் அது நியாயமே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

10. 'விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வெளியீடு

நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருக்கிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானநிலையில், முதல் பாடல் இன்று மதியம் 1 மணிக்கு வெளியானது. அதன்படி, 'சவதீகா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை, அனிருத் மற்றும் அந்தோணிதாசன் பாடியுள்ளனர். தற்போது இப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.