cinema news x page
சினிமா

Top 10 சினிமா|தமிழகத்தில் திரையரங்க கட்டணம் உயர்வு To சூர்யா படத்தின் பெயர் டீசர் வரை!

பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. ’சப்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன் நடித்துள்ள படம், ’சப்தம்’. அறிவழகன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ‘விடாமுயற்சி’ முதல் பாடல் அறிவிப்பு தேதி வெளியீடு

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’ இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் டிசம்பர் 27ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. சூர்யா படத்தின் பெயர் டீசர்

சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் ’சூர்யா - 44’ படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாள்களாவே படத்தின் பெயரை அறிவிக்காமல் ’சூர்யா - 44’ என்றே அழைக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், இப்படத்தின் பெயர் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‘ரெட்ரோ’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

4. 'ஐடென்டிட்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டோவினோ தாமஸ் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் இணைந்து 'ஐடென்டிட்டி' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். இப்படத்தினை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5. காசியில் உள்ள கோயிலுக்குச் சென்ற சாய் பல்லவி

’அமரன்’ பட வெற்றிக்குப் பின்னர் நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ’தண்டேல்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே காசியில் உள்ள விஸ்வநாதர் கோயிலுக்கு சென்ற சாய் பல்லவி, அங்கு தனது பெற்றோருடன் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டார்.

sai pallavi

6. 'அலங்கு' பட ட்ரெய்லரைப் பாராட்டிய விஜய்

அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சவுமியா தயாரித்துள்ள படம் 'அலங்கு'. எஸ்.பி.சக்திவேல் இப்படத்தை இயக்கி உள்ளார். வருகிற 27ஆம் தேதி ரிலீஸாகும் 'அலங்கு' திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘அலங்கு’ திரைப்பட ட்ரெய்லரை பார்த்த நடிகர் விஜய், படக் குழுவினருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

பி.வி.சிந்து marriage

7. பி.வி.சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. வாழ்த்திய அஜித்!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கும் தொழிலதிபர் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று புதுமண ஜோடியை வாழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

8. ‘லவ் அண்ட் வார்' படத்தில் இணைந்த தீபிகா படுகோன்

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து, ‘லவ் அண்ட் வார்' என்ற படத்தை இயக்குகிறார். இதில், ரன்பீர் கபூர், ஷாருக் கான், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள ஓரி மற்றும் நடிகை தீபிகா படுகோன் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

9. ஜான்வி கபூரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

ராம் சரணுக்கு ஜோடியாக ஆர்.சி.16 படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இயக்குநர் துஷார் ஜலோட்டா 'பரம் சுந்தரி' எனப் பெயரிடப்பட்டுள்ள பாலிவுட் படத்தில், ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்தப் படத்தில், 'சுந்தரி'யாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10. தமிழ்நாடு: திரையரங்க கட்டணம் உயர்வு

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளின் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.