ரஜினி, ஜிவி பிரகாஷ், சைந்தவி எக்ஸ் தளம்
சினிமா

Top10 சினிமா செய்திகள் | ’அலங்கு’ ட்ரெய்லரை வெளியிடும் ரஜினி.. ஒரே மேடையில் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!

பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. ’திரு மாணிக்கம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’திரு மாணிக்கம்’. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர்வெளியாகியுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2. 'வீரதீர சூரன் - பார்ட் 2’ டீசர் வெளியீடு

இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'வீரதீர சூரன் - பார்ட் 2' எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எழுப்பியுள்ளது.

3. ’புஷ்பா 2 தி ரூல்’ - 4 நாளில் ரூபாய் 800 கோடி

நடிகர் அல்லு அர்ஜுன், ஃப்ஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலபேர் நடித்து, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ’புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உலகளவில் வெளியானது. இந்த நிலையில், வெறும் 4 நாளில் ரூபாய் 800 கோடி வசூலை கடந்து வரலாறு படைத்துள்ளது. முன்னதாக, இப்படம் முன்பதிவுக்காக மட்டுமே ரூ.100 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

4. இணைந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்- பாடகி சைந்தவி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தனர். இது, ரசிகர்களில் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று, மலேசியாவில் நடைபெற்ற ஜி.வி.பிரகாஷ் கான்சர்ட்டில் சைந்தவி கலந்துகொண்டு பாடினார். இந்த நிகழ்வில், தனுஷ் நடிப்பில் வெளியான ’மயக்கம் என்ன’ திரைப்படத்தில் இருந்து பிறை தேடும் பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள். விவாகரத்திற்குப் பிறகு ஒரேமேடையில் இருவரும் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

5. ராஷ்மிகா மந்தனாவின் புதுப்படம் டீசர்

ராகுல் ரவிந்திரன் இயக்கி, நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் அடுத்த படம், ’தி கேர்ள் ஃப்ர்ண்ட்’. இப்படத்தின் டீசரை நடிகர் விஜய் தேவரகொண்டா, இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். டீசர் முழுவதும் ராஷ்மிகாவின் வெவ்வேறு உணர்ச்சிகளை பதிவு செய்துள்ளது.

6. பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர், பவன் கல்யாண். இவர் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார். இவர் தற்போது 'ஹரி ஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து வருகிறார். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7. ’அலங்கு’ படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் ரஜினி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள படம், ‘அலங்கு’. எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி, குணாநிதி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம், வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (டிச.10) மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இதுகுறித்த பதிவை இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

8. வேதிகாவின் ‘பியர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகை வேதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம், ‘பியர்’. இப்படத்தில் இவருடன், அரவிந்த் கிருஷ்ணா, பவித்ரா லோகேஷ், அனிஷ் குருவில்லா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம், வரும் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'பியர்' படத்தின் ட்ரெய்லரை நடிகர் மாதவன் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டார். முன்னதாக, இப்படத்தின் டைட்டில் சாங்கை நேற்று முன்தினம் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. ’பேபி ஜான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் அட்லி, இந்தியில் ’தெறி’ படத்தை ரீமேக் செய்து வெளியிடும் படத்தின் பெயர், ’பேபி ஜான்’ இப்படத்தில் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இந்தத் திரைப்படத்தின் ட்ரெயலர் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது

10. இந்த வார ரிலீஸ் ஆகும் படங்கள்

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள சில திரைப்படங்கள் குறித்துப் பார்க்கலாம். டி.சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால் நடித்துள்ள திரைப்படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகிறது. அதுபோல், சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மிஸ் யூ’ படம், டிச. 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கி, நடிகர் மிர்ச்சி சிவா நடித்திருக்கும் சூது கவ்வும் 2 படமும், பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத் நடித்துள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படமும் டிசம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.