நடிகரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சினிமா துறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். அரசியல் ஆர்வம் ஏற்பட்டதால், கடந்த 2008-ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்து திருப்பதி தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆனார். பின்னர், கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அரசியல்வாதியாக இருந்தாலும் சிரஞ்சீவி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ’சைரா நரசிம்ம ரெட்டி’ வெளியானது. நயன்தாரா, தமன்னா ஜோடியாக நடித்தார்கள்.
இந்நிலையில், தற்போது ஆச்சார்யா படத்தில் நடிக்கவிருக்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில், கொரோனா சோதனை செய்தபோது எனக்கு தொற்று உறுதியானது.
ஆனால், எனக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த நான்கைந்து நாட்களாக என்னை சந்தித்த அனைவரையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உடல்நிலைக்குறித்து அவ்வப்போது தகவல்களை தெரியப்படுத்துவேன்” என்று விழிப்புணர்வுடன் பதிவிட்டிருக்கிறார்.