சினிமா

இசை ராஜா சினிமாவில் அறிமுகமான நாள் இன்று!

webteam

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, இன்றைய தினத்தை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல மாட்டார்.

இசைமேதையாய் வலம் வரும் இளையராஜா 41 ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் அறிமுகமானது இதே நாளில்தான். ஜி.ராமநாதன், கேவி. மகாதேவன், எம்எஸ்வி போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் புதிய முகம் ஒன்று ’அன்னக்கிளி’ படத்தின் மூலம் சேரப்போகிறது என்பது பெரும்பாலும் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கறுப்பு வெள்ளைப்படமான அன்னக்கிளியில், ’மச்சானை பார்த்தீங்களா...’ என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். வெயிட்டான ரோல்களில் அப்போது வெளுத்துவாங்கிய சுஜாதாவின் நடிப்பை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தன இந்த படத்தின் வித்தியாசமான பாடல்கள்.

அறிமுகமான படத்திலேயே அசத்தியதால் யார் இந்த இளையராஜா என்று வியக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் படத்தில் அசத்திவிட்டு அடுத்தடுத்து மொக்கையாகிறவர்கள் அதிகம். ஆனால், இளையராஜாவின் ஆரம்பமே அசத்தல் ரகம். பிரபலமில்லாத படங்கள் கூட இளையராஜாவின் பாடல்களால் இன்றும் நிற்கிறது.

16 வயதினிலே, தியாகம், சிட்டுக்குருவி, இளமை ஊஞ்சலாடுகிறது, முள்ளும் மலரும், பிரியா, கல்யாண ராமன், ரோஜாப்பூ ரவிக்கைக்காரி என எழுபதுகளை துவம்சம் செய்துவிட்டு ஜானி, முரட்டுக்காளை என எண்பதுகளில் அடுத்த ரவுண்டுக்குள் நுழைந்தவர் இசையின் சகலகலா வல்லவன் இளையராஜா.

அவர் சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். ஆம், அதுதான் உண்மை!

வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல், ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. 1980கள் என்றாலே முழுக்க முழுக்க இவரின் இசைதான். அதன்பிறகு ஆயிரம் படங்களை தாண்டி இசைஞானி பட்டத்தை சுமக்கும் அளவுக்கு போனது உலகமறிந்த விஷயம்!