தன் பெயரை பயன்படுத்தி பணம் பறிப்பவர்கள் யார் என்பது தனக்கு தெரியவேண்டும் என டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
டிக்டாக் மூலம் வாய்ப்பு கிடைத்து நடிக்க சென்றவர்களை விட அதன்மூலம் பாதிக்கப்பட்டு காவல்நிலையங்களை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிரித்து வருகிறது.
அந்த வகையில் டிக்டாக்கில் கவர்ச்சி பாடல்கள் மற்றும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்களை தேர்வு செய்து வீடியோ வெளியிட்டதன் மூலம் இலக்கியா என்ற பெண் சமூகவலைதளவாசிகளிடம் பிரபலமானார். அவர் ஏராளமானோரிடம் தனிப்பட்ட முறையில் வீடியோ அனுப்புவதாக கூறி பணம் பறித்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் தன்னுடைய டிக்டாக் ரசிகர்களுக்கு 2 வீடியோக்களை வெளியிட்டார். அதில், முதல் வீடியோவில், “என் பெயரில் நிறைய பேர் ஐடி கிரியேட் பண்ணியிருக்காங்க. ஐடி கிரியேட் பண்றதால எனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனா அந்த ஐடியில், என் வீடியோவை போஸ்ட் பண்ணியிருக்காங்க. அது நான் இல்லை. அப்படி திட்டுவதாக இருந்தால், என் மேல கோபம் இருந்தால் கமெண்ட் பாக்ஸ்ல வந்து திட்டுங்க” எனத் தெரிவித்திருந்தார்.
மற்றொரு வீடியோவில் “உங்க ஐடின்னு நெனச்சு பணம் டிரான்ஸ்பர் பண்ணிட்டேன், என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்லி சில பேர் கமெண்ட் பண்ணி இருந்தாங்க. என்னுடைய லைஃப்புக்கு தேவையானது என்கிட்ட இருக்கு. மத்தவங்களை ஏமாத்தி அதன்மூலம் சாப்பிடணும்னு அவசியம் எனக்கு இல்லை. இந்த போலி ஐடி கிரியேட் பண்றவங்களுக்கு ஒன்னு சொல்றேன், உங்க பேர் சொல்லி பணம் வாங்கிக்குங்க. எதுக்கு என் பேர் சொல்லி வாங்குறீங்க? இந்த மாதிரி பண்ணாதீங்க. அது ரொம்ப தப்பு. நான் பேசி வீடியோ போட்டது இல்லை. ஆனால் இதை கேட்டதில் இருந்து மனசு ஒத்துக்கல. அதுக்காகத்தான் இந்த வீடியோவை போடுறேன்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், தன் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடுவதாகவும் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறி இலக்கியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் யாரிடமும் பணம் பறிக்க மாட்டேன். எனக்கு தேவையானது என்னிடம் இருக்கு. நான் அந்த மாதிரி குடும்பத்தில் இருந்து வரவில்லை. என் பெயரை பயன்படுத்தி நிறைய ஃபேக் ஐடி பயன்படுத்தி டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் மோசடி நடக்கிறது. எனக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரிய வேண்டும். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சிலரது இந்த செயலால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.” எனத் தெரிவித்தார்.