இசையமைப்பாளர் டி.இமான் இதுவரை 100 படங்களுக்கு இசைமைத்து முடித்திருக்கிறார். அவர் அதற்கான மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் 2001 ஆண்டு முதல் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். ஆரம்பக்கட்டத்தில் அவர் இசையமைத்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. அவரது இசைப் பயணத்தில் ‘கும்கி’ பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அதன் பிறகு இமான் தொட்ட படங்கள் எல்லாம் ஹிட். மண் மணம் மாறாமல் அவர் கொடுக்கும் ஒவ்வொரு பாடல்களும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. ‘மைனா’, ‘வெள்ளக்கார துரை’ என பல மாஸ் ஹிட் ஆல்பங்களை வழங்கி கோடம்பாக்கம் வட்டாரத்தில் முன்னணி இசையமைப்பாளராக அவர் இடம்பிடித்தார்.
இந்நிலையில் அவர் ’டிக்டிக்டிக்’ படத்தோடு தனது 100 படத்தை நிறைவு செய்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இமான், “வார்த்தைகள் இல்லை. இது கடவுளின் கொடை. எல்லா இசை ரசிகர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். மற்றும் இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், சவுன்ட் டெக்னிஷன்ஸ், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இவர்கள்தான் என் இசையைக் கொண்டுபோய் சேர்த்தவர்கள். டிக்டிக்டிக் எனக்கு 100வது படம். இத்தனை ஆண்டுகால உங்களது தீவிரமான ஆதரவுக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இமானின் 100வது இசைப்பயணத்திற்கு நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது 100வது பயணத்தின் போது உடன் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். டிக்டிக்டிக் ஆல்பம் உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.