சினிமா

ஆத்தாடி.. எந்தப் பக்கம் திரும்புனாலும் விக்ரம் பட புரமோஷனா இருக்கு! தொடங்கியது புக்கிங்

ஜா. ஜாக்சன் சிங்

சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி காட்சியின் படத்துடன் சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு ஒன்று வலம் வருகிறது. விக்ரம் படத்தோடு புரமோஷன் எந்த அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அந்தப் பதிவு சிறந்த உதாரணம். சில்லுனு ஒரு காதல் படத்தில் ’உங்க அப்பாவை யாரெல்லாம் அடிச்சிருக்காங்க’ என வடிவேலு மனைவி அவர்களின் பிள்ளைகளிடம் கேட்க ஊரில் இருக்க எல்லாரு பேரையும் சொல்லிகிட்டே இருப்பாங்க பசங்க. அப்படித்தான் விக்ரம் தொடர்பாக யூடியூப்பில் அவ்வளவு பேர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் படத்தின் புரமோஷனில் இந்த அளவிற்கு பங்கேற்பது இதுதான் முதல்முறையாக இருக்கும். 

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பதால், அவரது அடுத்த படைப்பான 'விக்ரம்' திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கமல்ஹாசன் ஒரு பிராஜெக்டில் இருந்தால் அதில் அவரது மெனக்கெடலும், பங்களிப்பும் கணிசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதுவும் விக்ரம் திரைபடத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது.

இந்நிலையில், விக்ரம் திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வரும் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, 'விக்ரம்'படத்திற்கான பிரமோஷனும் வேற லெவலில் செய்யப்பட்டு வருகிறது. கிராமம் முதல் நகரம் வரை எங்கு பார்த்தாலும் 'விக்ரம்' பட பேனர்களே பெரும்பாலும் தென்படுகின்றன.

பல இடங்களில் தண்ணீர் பாட்டில்களில் 'விக்ரம்' திரைப்படத்தின் போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன. நகரங்களில் உள்ள பெரிய மால்களில் விக்ரம் பட ட்ரெய்லர்கள் ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு திரும்பும் திசையெல்லாம் 'விக்ரம்' பட பிரமோஷன்கள் களைக்கட்டி வருகின்றன. அதேபோல, சமூக வலைதளங்களிலும் இந்த திரைப்படத்தை ப்ரமோட் செய்யும் வகையிலான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

உதாரணமாக, பஞ்சத்தந்திரம் திரைப்படத்தில் கமல், ஜெயராம், யூ.கி. சேது, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் கான்ஃபெரன்ஸ் காலில் பேசும் காட்சியை அப்படியே 'விக்ரம்' பட பிரமோஷனுக்காக அவர்கள் புதிதாக மாற்றியமைத்துள்ளனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதனிடையே, மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடிகர் மோகன் லாலுடன் கமல்ஹாசன் கலந்துகொண்டு 'விக்ரம்' திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இவ்வாறு நாடெங்கிலும் அனைவரும் 'விக்ரம்' திரைப்படம் பற்றி பேசும் அளவுக்கு அதன் பிரமோஷன் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு மொழிகளில் படம் வெளியாவதால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கமல்ஹாசன் நேரடியாக சென்று புரமோஷன் பணியில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்தியாவை தாண்டி மலேசியாவிலும் விக்ரம் பட புரமோஷனை செய்து முடித்துள்ளார் உலக நாயகன்.