சினிமா

துப்பறிவாளன் வெளியாவதில் சிக்கல்

துப்பறிவாளன் வெளியாவதில் சிக்கல்

Rasus

நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் திரைப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இன்று படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் துப்பறிவாளன். இன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திரைப்படத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமையை கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 55 லட்சம் ரூபாய் மதிப்பில் டிஎன்சி சினி ஸ்கிரின்ஸ் நிறுவனம் பெற்றது. பின்னர் படத்தின் முழுமையான விநியோக உரிமையை, அப்படத்தின் நடிகரான விஷாலின் நிறுவனம் பெற்றது. இதனால் தாங்கள் கொடுத்த 55 லட்சம் ரூபாயை திருப்பிதரும் வரை படத்தை வெளியிட தடை விதிக்கக்‌கோரி, டிஎன்சி சினி ஸ்கிரின்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை 5-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது இன்று காலை 10.30-க்குள் பணம் திருப்பி தருவதாக விஷால் பட நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, உத்தரவாதம் அளித்தபடி பணத்தை திருப்பிகொடுக்காவிட்டால், படத்தை வெளியிடக்கூடாது என்ற தடை அமலாகும் என்று கூறி வழக்கு விசாரணையை வருகின்ற 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் அறிவிக்கப்பட்ட தேதியான இன்று படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.