சினிமா

“இது உங்கள் மாஸ்டர் பீஸ்; சொல்ல வார்த்தையில்லை” - ஆலியா பட்டை புகழ்ந்து தள்ளிய சமந்தா!

Veeramani

'இது உங்கள் மாஸ்டர் பீஸ் திரைப்படம்' என  'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஆலியா பட்டை புகழ்ந்துள்ளார் நடிகை சமந்தா

‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

கொரோனா காணமாக இப்படம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 25-ம் தேதி இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் அளவிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியான மூன்று நாட்களில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்த ஆலியா பட்டிற்கு போன் செய்து நடிகை சமந்தா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “இது உங்கள் மாஸ்டர் பீஸ். உங்களது நடிப்பை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. உங்களது ஒவ்வொரு வசன உச்சரிப்பும் உடல் மொழியும் என்னுடைய நினைவில் நீங்காமல் இருக்கும்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மும்பையின் சிவப்பு விளக்குப்பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலோச்சியவர் கங்குபாய் கொத்தேவாலி. இவர் மும்பையின் மாஃபியா குயின் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் கதாபாத்திரத்திரத்தை தழுவித்தான் ஆலியா பட், ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக, கங்குபாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா, ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில், தனது அம்மாவை விலைமகளாக சித்தரித்துள்ளனர் என புகார் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.