சினிமா

ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? - அபர்ணா விளக்கம்

சங்கீதா

ஆர்.ஜே. பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.

ஃபகத் ஃபாசிலின் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர், திருச்சூரைச் சேர்ந்த அபர்ணா பாலமுரளி. அதன்பின்பு ‘எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், ஜி.வி. பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

எனினும் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம்தான் அவருக்கு தமிழ் திரையுலகில் ரசிகர்களிடையே பெயர் வாங்கித் தந்தது. அதிலும் அந்தப் படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் கிராமத்து தமிழ் பெண்ணாகவே அபர்ணா பாலமுரளி கலக்கி இருப்பார்.

அதன்பிறகு அவரது நடிப்பில் வெளியான ‘தீதும் நன்றும்’ படம் சரியாக வரவேற்பு பெறாத நிலையில், தற்போது ஆர்.ஜே. பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ஏற்கனவே வரவேற்பு பெற்ற நிலையில், வருகிற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்தப் படத்தில் வரும் சௌமியா கதாபாத்திரம், பக்கத்து வீட்டுப் பெண்ணை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். உறவின் மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்படத்தில், நானும் நடித்து இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ‘வீட்ல விசேஷம்’ படம், இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது தான், நான் உற்சாகமடைய முதல் காரணம்.

இரண்டாவதாக தமிழ் சினிமா பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப, ஒரிஜினல் பதிப்பிலிருந்து பல மாற்றங்களைச் செய்து, இந்தப் படத்திற்கு பாலாஜி ஸ்கிரிப்ட் எழுதிய விதம். ‘வீட்ல விசேஷம்’ ஒரு நகைச்சுவைத் திரைப்படம். எனினும் பார்வையாளர்கள் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வீட்டிற்குத் திரும்பும்போது, நிறைய நல்ல விஷயங்களை எடுத்தும் செல்லும் அளவுக்கு படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.

இந்தப் படத்தில் சத்யராஜ் சார் மற்றும் ஊர்வசி மேம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரத்தில் பாலாஜி சார் என்னுடைய கதாபாத்திரத்தையும் சிறப்பாக எழுதி வடிவமைத்துள்ளதுடன், திரையில் அழகாகவும் காட்டியுள்ளார். நான் திரையில் வரும்போதெல்லாம், எனது கதாபாத்திரம் பார்வையாளர்களால் பாராட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில் அவர் அமைத்துள்ளார். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற அனுபவம் எந்தவொரு நடிகருக்கும் நிச்சயமாக ஒரு சிறப்பான உணர்வையே தரும். சத்யராஜ் சார், ஊர்வசி மேம், மறைந்த கேபிஏசி லலிதா மேம், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலருடன் சேர்ந்து நடிப்பது போன்ற ஒரு குறிப்பிடத்தக்க காட்சி உள்ளது. அப்போது நாங்கள் எடுத்த புகைப்படம் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அது நான் என்றென்றும் போற்றும் தருணமாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.