கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மெகாஹிட் ஆன திரைப்படம் இந்தியன். 1996 இல் வெளிவந்த இப்படம், லஞ்சத்திற்கு எதிரான கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.எம்.ரத்தினம் தயாரித்த இப்படத்தில், மனீஷா கொய்ராலா, ஊர்மிலா சுகன்யா, கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தின் 2ஆம் பாகம் எடுக்கவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையே கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்க, இப்படம் எடுக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 படம் எடுப்பதை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் இயக்குனர் ஷங்கர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில் இந்தியன் 2 என எழுதப்பட்டிருக்கும் வெப்பக்காற்று பலூன் ஒன்றை தாய்வான் நாட்டில் ஷங்கர் பறக்கவிடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதனால் இந்தியன் 2 படம் தொடங்கப்படும் சூழ்நிலை பிரகாசமானது. மேலும், ரஜினி அக்ஷய் குமார் நடிப்பில் தயாரிப்பில் உள்ள 2.0 படமும் முடிவடைந்து நவம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே ஷங்கர் அறிவித்துவிட்டார். இந்நிலையில் இந்தியன் 2 படப்பட்பிடிப்புக்காக நானும், ஷங்கரும் இடங்களை தேர்வு செய்து வருகிறாம் என ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபியை பதிவிட்டிருந்தார்.
இந்தியன் 2 படிப்பிடிப்பை நடத்துவதற்காக ஷங்கரும், ரவி வர்மனும் பல இடங்களில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும், நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ட்விட்டரில் Indian2 மற்றும் SenapathyisBack என்ற ஹாஷ்டேக்குகள் டிரண்டாகி வருகிறது.