சினிமா

’மிஷன் இம்பாசிபிள்’ படத்துக்காக விமானத்தில் இருந்து குதித்த டாம் குரூஸ்: வைரல் வீடியோ!

’மிஷன் இம்பாசிபிள்’ படத்துக்காக விமானத்தில் இருந்து குதித்த டாம் குரூஸ்: வைரல் வீடியோ!

webteam

’மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’ படத்துக்காக ஹீரோ டாம் குரூஸ் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ’மிஸன் இம்பாசிபிள்’ படத்துக்கும் கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் ஸ்பை திரில்லர் படமான இதன் அடுத்தடுத்தப் பாகங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி, வசூலிலும் சாதனை படைத்தன. இப்போது இதன் ஆறாம் பாகம், ’மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இதில் டாம் குரூஸூடன், ரெபாக்க பெர்குசான், சைமன் பெக், மைக்கேல் மோனஹன், சீன் ஹாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் மேக்குரைன் இயக்குகிறார். ஜூலை மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் டாம் குரூஸ். 


இதன் படப்பிடிப்பின் போது, ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்குத் தாவும் காட்சியின் டாம் குரூஸ் காயமடைந்தார். பின்னர் 2 மாத ஓய்வுக்குப் பின் ஷூட்டிங்கில் பங்கேற்றார். இந்த படத்தின் முதல் டிரைலர் பிப்ரவரி மாதம் வெளியடப்பட்டது. அது, ரசிகர்களிடம் வர வேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்துள்ளது. அதில் விமானத்தில் இருந்து டாம் குரூஸ் கீழே குதிக்கும் காட்சி படமாக் கப் பட்டுள்ளது. இந்தக் காட்சியில் டாம் குரூஸ் நிஜமாகவே 25 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, குதித் துள் ளார். இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.

இதுபற்றி அந்தப் படத்தின் ஸ்டன்ட் ஒருங்கிணைப்பாளர் வேட் ஈஸ்ட்வுட் கூறும்போது, ‘விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் ’ஹலோ ஜம்ப்’பை சினிமாவுக்காக செய்துள்ள ஒரே நடிகர் டாம் குரூஸ்தான். காட்சி நிஜமாக இருக்க வேண்டும் என்பதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு, டாம் குரூஸ் இந்தக் காட்சியில் நடித்துள்ளார்’ என்றார்.

இதற்காக, தேவையான உபகரணங்களுடன் நூறு முறை விமானத்தில் இருந்து குதித்து பயிற்சி எடுத்துள்ளார் குரூஸ். இந்தக் காட்சி ஒரே டேக்கில் படமாக்கப்பட்டுள்ளது.